குறைந்தபட்சம் 150 மாணவர்கள் என்ற வரையறையை ஏற்கமுடியாது

இந்நாட்டில் நம்மை விடப் பெரிய இனம், வசதி படைத்த சீனர்களே 35 விழுக்காட்டு பள்ளிகளை இழக்கவுள்ளதைத் துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். அவரின் எச்சரிக்கையை மீண்டும் நம் சமுதாயத்திற்கு நினைவூட்டிய டாக்டர் சேவியரின் செயல் போற்றத்தக்கது. இருப்பினும் அச்செயலைக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாக சில அறிவு மேதைகள் சாடியுள்ளது ஆச்சரியமாகவுள்ளது.

தன்னை ம.இ.கா வின் தகவல் பிரிவுத்தலைவர் என்று கூறிக்கொள்ளும் சிவசுப்பரமணியம், 340 தமிழ்ப்பள்ளிகளின் தலையெழுத்தைக் குண்டுச்சட்டி என்கிறார். ஆக, ம.இ.காவிற்கு தமிழ்ப்பள்ளிகளின் தலையெழுத்து ஓர் அற்ப விசயமாகத் தெரிகிறது.

அவர்களின் போக்கு தங்கள் பதவி, பட்டத்திற்காக தமிழ்ப்பள்ளிகளை கைவிட்டு விட்டதைப் புலப்படுத்துகிறது. மலேசிய கல்விசட்டம் 1961 ல் காணப்படும் ஒரு விதி அதாவது “ஒரு தாய்மொழிப்பள்ளியின் பெருபாண்மையான பெற்றோர்கள் தீர்மானித்தால் அப்பள்ளியைத் தேசிய பள்ளியாக மாற்றலாம்” என்று உள்ளது. அன்று, அதை உடனடியாகச் சரி செய்யாததால், அது தாய்மொழிக் கல்வியின் உயிரை இன்றுவரை வாட்டுகிறது. அன்று அக்கல்வி விதியை ஏதோ காரணங்களுக்காகக் கண்டும் காணமலிருந்த ம.இ.காவினர், இன்றும், அதே போக்கைக் கொண்டுள்ளனர் என்பதனை இதுவரை அவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் தெளிவுபடுத்துகிறது.

இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் வாழ வேண்டுமென்றால் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கவுள்ள எதிர்காலச் சவால்கள் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிப்பது நல்லது. கண்களைக் கட்டி கடைசியில் கழுத்தை அறுக்கும் நடைமுறைகளை இனி எவரும் பின்பற்றக்கூடாது. ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துத்துவம் என்பது எல்லாக்காலத்திலும் மக்களைத் துடிப்புடன் விழிப்புடன் வழி நடத்துவதுதாகும். ஆக, இச்சமுதாயம் எல்லாக் காலத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது ஒரு நல்ல அரசியல் தலைமைத்துவம். அதனை வரவேற்க இதனை எழுதியே ஆகவேண்டும் என்பதால் சிவசுப்பரமணியம், நெகிரி டத்தோ வி.மோகன் மற்றும் மணிமன்றத்தின் முன்னால் தேசிய தலைவர் என்ற கூறிக்கொள்ளும் ஆர்.ஆர்.எம் கிருஷ்ணன் போன்றோர், மகன் இறந்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுத்தால் போதும் என்று பாணியில் அறிக்கைகள் விடக்கூடாது. தமிழ்ப்பள்ளிகள் அழிந்தாலும் பரவாயில்லை பாரிசானுக்கு ஆட்சி கட்டில் கிடைத்தால் போதும், பிறகு ம.இ.கா எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் என்று இச்சமுதாயத்தை ஏமாற்றக்கூடாது.

ஆட்சியிலிருப்பவர்கள் எது செய்தாலும் அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை விட்டே வாழ்க்கையை ஓட்டிவரும் கூட்டம் ஒன்று உள்ளதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆனால் இது போன்ற வேளைகளில் அவர்களின் சுயரூபத்தை துள்ளிதமாக அடையாளம் காண முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் உண்மை நிலையை மறைக்க அறிக்கை விடும் செயலைத் தமிழர்கள் இனி வேடிக்கைப் பார்க்க முடியாது! அது தாய்மொழியை முற்றாக அழித்து விடும்.

டாக்டர் சேவியரின் அறிக்கை பொது இயக்கங்களைச் சாடும் ஓர் அறிக்கை என்பதனை விட தமிழ்ப்பள்ளிகளை காக்கும் திட்டத்துக்கான ஓர் அடித்தளம் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இச்சட்டம் அமல்படுத்தப்படும் காலத்தில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளை விட மற்ற மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும். இந்தியர்கள் மொழி விசயத்தில் விழிப்படைய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதை, மலேசிய நண்பனில் சமூகப் பார்வையில் மூத்த எழுத்தாளர் பாதாசன் நன்கு சுட்டிக் காட்டியிருந்தார். அதனைச் சமூகத்திலுள்ள அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும்.

டாக்டர் சேவியர், தமிழ்ப்பள்ளிக்காக இக்குறுகியக் காலத்தில் என்ன செய்துள்ளார் என்பதனைப் பிறகு பார்ப்போம். முதலில், இப்பொழுது எழுந்துள்ள விவகாரத்துக்கு எப்பொழுது, எப்படித் தீர்வுகாண்பது என்பதே முக்கியம். மூத்த எழுத்தாளர் திரு. பாதாசன் சுட்டிக்காட்டியிள்ளப்படி அவசர விவாதத்தில் சமுதாயம் இறங்க வேண்டும். அரசாங்கப் பரிந்துரைப்படி குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை 150 ஆக உள்ளது. அதனை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையாக உள்ள 150 மாணவர்கள் என்ற வரையறையை 50 மாணவர்களாகவோ அல்லது சமுதாயம் ஒன்று கூடி நிர்ணயிக்கும் ஓர் எண்ணிக்கையாகவே திருத்தம் செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, தமிழ்மொழிப்பள்ளிகளுக்கு இந்தியர்கள் அதிகம் வாழும் இடத்தின் அருகில் மாற்று நிலத்தினைப் பெறும் பொறுப்பைக் கல்வி அமைச்சே ஏற்க வேண்டும். அதனைப் பெற்றோர்களிடம் விட்டுவிடும் தற்போதைய விதிமுறையை நீக்க வற்புறுத்த வேண்டும்.

மூன்றாவதாக, நமது கோரிக்கைக்கு முழு வடிவம் கொடுக்க மலேசியாவிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் ஒன்று திரட்டித் தீர்மானிக்க வேண்டும். இதனை சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசு ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக, டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  ஆனால், எதனையும் அரசியலாக்கிப் பார்க்கும் ஒரு பிரிவினரின் போக்கு நமது குறிக்கோளுக்கு, தமிழ்ப்பள்ளிகளுக்கு, எந்தப் பாதகத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பதால் அப்படிப்பட்ட மாநாட்டை ஏற்று நடத்தத் தீர்மானிக்கும் பொறுப்பையும் பொது மக்களிடம் விட்டுவிட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளைக் காக்க ஒன்று கூடுவோம்.

———————————-

-அண.பாக்கியநாதன், செப்டெம்பர் 22, 2012.