சுவாராம்: ஸ்கார்ப்பின் சாட்சி ஒருவருக்கு சபீனா (அழைப்பாணை) வழங்கப்பட்டுள்ளது

மலேசியா பிரான்ஸை சேர்ந்த டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீதான பிரஞ்சு நீதிமன்ற விசாரணையில் உதவுவதற்கு சுவாராம் பரிந்துரை செய்த சாட்சிகளில் ஒருவருக்கு ஒரு வழியாக  சபீனா (அழைப்பாணை) வழங்கப்பட்டுள்ளது.

“அந்த விசாரணை முன்னேற்றம் காண்கிறது. முதல் சாட்சிக்கு முதல் சபீனா கொடுக்கப்பட்டுள்ளதை உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளோம்,” என சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

“ஆனால் அந்தச் சாட்சி யார் என்பதையும் அது எப்போது சபீனா கொடுக்கப்பட்டது என்பதையும் நான் இப்போதைக்கு உங்களுக்குச் சொல்ல முடியாது. நாங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். நீதிமன்றக் குறிப்புக்களை மட்டுமே நாங்கள் மேற்கோள் காட்ட முடியும்,” என்றார் அவர்.

ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி கொள்முதலில் முக்கியமான மனிதராக ( point-man ) செயல்பட்டதாகக் கூறப்படும் ஜாஸ்பிர் சிங் சாஹ்ல்-க்கு சபீனாவை வழங்கும் நடவடிக்கையில் பிரஞ்சு வழக்குரைஞர்கள் இறங்கியுள்ளதாக கடந்த ஜுன் மாதம் சுவாராம் அறிவித்திருந்தது.

ஆனால் சபீனா எதனையும் பெறவில்லை என ஜாஸ்பிர் கூறினார்.

ஜாஸ்பிருக்கு இந்த முறை சபீனா வழங்கப்பட்டு விட்டதா என கருத்தரங்கிற்குப் பின்னர் சிந்தியாவிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் புன்னகையுடன் சாட்சியின் அடையாளத்தைத் தெரிவிக்க மறுத்து விட்டார்.

என்றாலும் ஸ்கார்ப்பின் பேரத்தை விசாரிக்கும் பிரஞ்சு நீதிமன்றங்களுக்கு சுவாராம் பரிந்துரை செய்த ஏழு சாட்சிகளில் ஒருவருக்கு சபீனா கொடுக்கப்பட்டுள்ளதை சிந்தியா உறுதிப்படுத்தினார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடி, தனிப்பட்ட துப்பறிவாளர் பி பால சுப்ரமணியம், நஜிப்பின் நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தா, அவரது மனைவி மாஸ்லிண்டா மாஹ்சான், அவரது தந்தை அப்துல் மாலிம் பகிந்தா ஆகியோர் சுவாராம் பரிந்துரை செய்த மற்ற ஆறு சாட்சிகள் ஆவர்.

‘இப்போது யார் மீது கவனம் ? சுவாராமா அல்லது ஸ்கார்ப்பினா ?” என்னும் தலைப்பைக் கொண்ட அந்தக் கருத்தரங்கில் சிந்தியா பேசினார்.

அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் சக்தியைக் கொண்ட பல மில்லியன் டாலர் அமைப்பு என சித்தரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றதாக அவர் சொன்னார்.

“அது உண்மையல்ல. சுவாராம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் 450,000 ரிங்கிட் மட்டுமே. அது பெரிய தொகை அல்ல. அது ஒர் ஆண்டுக்கு எட்டு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் ஆறு இயக்கங்களை நடத்தவும் மட்டுமே போதுமானது,” என்றார் அவர்.

அந்தக் கருத்தரங்கில் பேசிய தெனாகானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ், சுவாராம் இப்போது எதிர்நோக்கும் அச்சுறுத்தல்- 1996ம் ஆண்டு குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் குடியேற்றத் தொழிலாளர்கள் மரணம் குறித்த விவரங்களை தெனாகானித்தாவுக்கு ( சுவாராமை போன்று அதுவும் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம்) நிகழ்ந்ததைப் போன்றது எனத் தெரிவித்தார்.