வாக்காளர் பட்டியலில் போலி மை கார்டு வைத்திருந்த பிலிப்பினோக்காரர்

போலி மை கார்டை வைத்திருந்ததற்காக 2010ம் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதாக கூறப்படும் சபாவில் உள்ள பிலிப்பினோக்காரர் ஒருவருடைய பெயர் ஜோகூர் வாக்காளர் பட்டியலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியிடப்பட்ட சபா டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேட்டின் பிரதியில் அந்த விவரம் காணப்படுவதாக ‘மிலோசுவாம்’ என்ற புனை பெயரில் எழுத்தும் பக்காத்தான் ஆதரவு வலைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

அந்த ஏட்டின் பிரதியை அவர் தேசிய பதிவுத் துறையின் பழஞ்செய்தி காப்பகத்தில் பார்த்தார்.

அந்த ஏட்டிலும் அதன் மலாய் பதிப்பான ஹரியான் எக்ஸ்பிரஸிலும் அந்தச் செய்தி ‘போலி மை  கார்டு: ‘பிலிப்பினோ ஜெயிலில் அடைக்கப்பட்டார்’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.

போலி மை கார்டைப் பயன்படுத்தியதற்காக 43 வயதான அந்த பிலிப்பினோக்காரருக்கு கோத்தாகினாபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2010ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி ஒராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

“கம்போங் லிகாஸைச் சேர்ந்த சம்சுல் சாலே 670110-12-5035 என்னும் தொடர் எண்ணைக் கொண்ட ஆவணத்தை தமது சொந்தப் பெயரில் பயன்படுத்தியதை குற்றச்சாட்டை மாஜிஸ்திரேட் சிண்டி மக்ஜுஸ் பாலித்துஸ் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்,” என அந்தச் செய்தி குறிப்பிட்டது.

“போலீஸ் அதே ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி மாலை மணி 5.46க்கு அந்த ஆவணத்தை சோதனை செய்த பின்னர் சம்சுலைக் கைது செய்தது.”

அந்த மை கார்டு எண்ணை தேர்தல் ஆணையத்தின் இணைய சரி பார்க்கும் முறையில் ஆய்வு செய்த போது அதே சம்சுல் சாலே பெயரில் ஒரு வாக்காளர் ஜோகூர் பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள் பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளது தெரிய வந்தது.

தேர்தல் ஆணையம் ‘சோதனை செய்யும்’

இன்று காலை சோதனை செய்த போது டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தியும் சம்சுலின் பதிவும் இணையத்தில் காணப்பட்டன.

அது குறித்து வினவப்பட்ட போது “தேர்தல்  ஆணையம் அதனை நிச்சயம் விசாரிக்கும்’ என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறினார்.

போலி மை கார்டை வைத்துள்ள அந்நியர் ஒருவர் எப்படி தேசிய பதிவுத் துறை தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் கண்காணிப்பையும் மீறி வாக்காளாராக பதிவு செய்ய முடிந்துள்ளது என்ற கேள்வியை அந்தக் கண்டு பிடிப்பு எழுப்பியுள்ளது.

தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரக் களஞ்சியத்தில் தங்களது தனிப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகள் மட்டுமே வாக்காளர்களாகப் பதிந்து கொள்வதற்குத் தகுதி பெற்றவர்கள் என தேர்தல் ஆணையம் எப்போதும் வலியுறுத்தி வருகின்றது.

கடந்த ஜுன் மாதம் சபாவில் போலி மை கார்டுகளை வெளியிடும் கும்பல் ஒன்றை அதிகாரிகள் முறியடித்தனர். அதன் தொடர்பில் தேசியப் பதிவுத் துறை அதிகாரி ஒருவர் உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டனர்.