நெற்களஞ்சிய திட்டத்தில் இந்தியர்களுக்கு வாய்ப்புண்டா?, ஹிண்ட்ராப் சவால்

-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி.

2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்த பிரதமர், மலேசியாவின் அரிசி உற்பத்தியை பெருக்கும் வகையில் மேலும் நான்கு  நெற்களஞ்சிய பகுதிகளை உருவாக்கப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார். சுமார் 19,000  ஹெக்டர் (46,950 ஐம்பது ஏக்கர்)  நிலப் பரப்பில் 12,237 விவசாயிகளை ஈடுபடுத்தி, ஓர் இலட்சத்து நான்காயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தியை குறிவைத்து இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி நெல் சாகுபடியில் விருப்பம் கொண்டுள்ள நபர்  ஒருவருக்கு  சராசரியாக சுமார்  1.55  ஹெக்டர்  (3.8  ஏக்கர் ) விவசாய நிலம் ஒதுக்கப் படுவதாக பொருள்படுகிறது. அந்த ரீதியில் இந்த நில மேம்பாட்டு திட்டத்தில் குறைந்தபட்சமாக 10  விழுக்காடு வாய்ப்பை  இந்திய மலேசியர்களுக்கு கண்டிப்பாக பாரிசான் அரசு அறிவிக்க வேண்டும் என்பது  ஹிண்ட்ராப் இயக்கத்தின் கோரிக்கையாகும்.

அதவாது, சுமார் 1900 ஹெக்டர் நிலப் பரப்பில் 1225  இந்திய வம்சாவளி மலேசிய குடிமக்களுக்கு, தலா 1.55 ஹெக்டர் வீதம்  ஒதுக்கப்பட்டு, தேசிய மேம்பாட்டு திட்டங்களில் இந்தியர்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்பது ஹிண்ட்ராப் அமைப்பின் எதிர்பார்ப்பாகும்.

அணைத்து மலேசியர்களின் மீதும் அக்கறை கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய  அடிப்படையான, ஏற்புடைய மக்களின் எதிர்பார்ப்பாகவே இந்த கோரிக்கை அமைகிறது.

இந்தியர்களுக்கு நெல் விவசாயத்தில் ஆர்வம்  இல்லை, அனுபவம் இல்லை என்றெல்லாம் சாக்கு போக்கு சொல்லி இந்த பரிந்துரையை யாரும் தட்டிக் கழித்திட வேண்டாம். “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்று திருவள்ளுவர் 2043 ஆண்டுகளுக்கு முன்னரே பாடியிருப்பதானது , இந்தியர்களுக்கும் உழவுக்கும் எத்துனை நீண்ட அனுபவம் என்பதை பறைசாற்றுகிறது.  மேலும் முறையான பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும், பண உதவிகளும் நல்கப்பட்டால் சட்டென பிடித்துக்கொள்ளும் திறன் இந்நாட்டு இந்தியர்களுக்கும் உண்டு.

இந்தியர்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய இந்த வாய்ப்பை அரசு சம்பந்தப்பட்ட இந்திய விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடைய  வகை செய்ய வேண்டும். அதை விடுத்தது அரசியல் கட்சிகள் மூலமாகவோ, பிற அமைப்புகள் மூலமாகவோ செயல்படுத்த முயலக்கூடாது.

தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட இந்திய சமூகத்திற்கு தேவை இதுபோன்ற நீண்ட நிரந்தர திட்டங்களே தவிர வெறும் கண்துடைப்பு ஜாலங்கள் அல்ல. இந்தியர்கள்  இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படாமளிருக்க எந்த காரணமும் இல்லை. மனப்பூர்வமாக  இந்திய சமூகத்திற்கு நல்லதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிரதமருக்கு உண்மையிலேயே இருக்குமானால், ஹிண்ட்ராப் அமைப்பின் இந்த கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் என்று சவால் விடுகிறோம்.

TAGS: