சுதந்திரமான நியாயமான தேர்தல்களைக் கோரி பக்காத்தான் மாபெரும் பேரணியை நடத்தும்

இந்த நாட்டில் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி நவம்பர் 3ம் தேதி புக்கிட் ஜலில் தேசிய அரங்கில் பக்காத்தான் ராக்யாட் ‘மாபெரும் பேரணி’ ஒன்றை நடத்தவிருக்கிறது.

சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் கூட்டணியான பெர்சே விடுத்துள்ள கோரிக்கைகள் மீது அந்தப் பேரணி கவனம் செலுத்தும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார்.

பெர்சே விடுத்துள்ள கோரிக்கைகள் குறிப்பாக தூய்மையான வாக்காளர் பட்டியல், ஊடகங்களில் சுதந்திரமாக செய்திகளை வெளியிடுவதற்கான உரிமைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றார் அவர்.

ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியின் ‘தொடர்ச்சியாக’ நவம்பர் 3ம் தேதி பேரணி இருக்காது எனக் கூறிய மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் தெரிவித்தார்.

என்றாலும் அதில் கலந்து கொள்ளுமாறு பெர்சே போன்ற அரசு சாரா அமைப்புக்களுக்கு பக்காத்தான் அழைப்பு விடுக்கும் என்றார் அவர்.