அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் கட்டாயம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த ஆறு மாதத்துக்குள் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் கழிப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உத்தரவிட்டது. கழிப்பறை இல்லாத பள்ளிக் கூடங்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குவதாகவும் உச்சநீதிமன்றம் அந்த வழக்கு விசாரணையின் போது கூறியிருந்தது.

இந் நிலையில் பள்ளிக் கூட வசதிகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் அடுத்த ஆறுமாதங்களுக்குள் அமல் படுத்தப் பட வேண்டும் என்று கே. எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கூடங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி என்ற ஷரத்துக்கு புறம்பானது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

TAGS: