நஜிப்: கார் விலைகள் மீது அரசாங்கம் நீண்ட காலத் திட்டத்தை வகுக்கிறது

கார் வங்கும் போது சிறந்த தேர்வுகளை மலேசியர்கள் நாடுவதைத் தாம் அறிந்திருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

அதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அந்த விவகாரத்தை ஆய்வு செய்வதாக அவர் சொன்னார்.

“மக்கள் சிறந்த தேர்வுகளை விரும்புவதை நான் உணர்ந்துள்ளேன். நாங்கள் இன்னும் அந்த விஷயத்தை ஆய்வு செய்கிறோம். பெரும்பாலும் ஒரு கட்டத்தில் நாங்கள் நீண்ட காலத் தீர்வைக் காண்போம்.”

கூகுள் ஏற்படு செய்த இணைய உரையாடல் நிகழ்ச்சி வழி நஜிப் பேசினார்.

கார் விலைகளைக் குறைக்கும் பொருட்டு கலால் வரிகளை குறைக்கும் எண்ணம் அரசாங்கத்திடம் உள்ளதா என வினவப்பட்ட போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.

பக்காத்தான் ராக்யாட் தான் அதிகாரத்துக்கு வந்தால் வாகனங்களுக்கான கலால் வரிகளைப் படிப்படியாக குறைக்கப் போவதாக வாக்குறுதி அளித்தததைத் தொடர்ந்து கார் விலைகள் தொடர்பில் ஏதாவது செய்யுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகின்றது.

பக்காத்தான் யோசனை அமலாக்கப்பட்டால் கார் விலைகள் குறைந்தது 60 விழுக்காடு சரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்றாலும் அந்த விஷயம் மிகவும் சிக்கலானது என்றும் அதனால் அதனை துல்லிதமாக ஆராய வேண்டும் என்றும் நஜிப் தெரிவித்தார்.

“முதலாவதாக கலால் வரிகளைக் குறைப்பதால் கார் விலைகளில் அந்தத் தொகை முழுவதும் குறையும் என அர்த்தமில்லை. இரண்டாவதாக அரசாங்கத்துக்கும் ஒரு வரம்பு உண்டு. ஏனெனில் ஆண்டுக்கு 7 பில்லியன் ரிங்கிட் அதன் மூலம் வருமானமாகக் கிடைக்கிறது.

“பழைய கார் சந்தை சீர்குலைந்து விடும். அத்துடன் நாம் புரோட்டோனை மட்டுமின்றி உயிர் வாழ்வுக்கு அதனை நம்பியிருக்கும் மக்களையும் கவனிக்க வேண்டும்,” என்றார் அவர்.

TAGS: