பெர்சே தலைவர்கள் விமான நிலையங்களில் அச்சுறுத்தப்படுகின்றனர்

கடந்த மாதத்திலிருந்து குறைந்தது மூன்று பெர்சே குழு உறுப்பினர்கள் அனைத்துலகப் பயணங்களுக்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் சிறிது நேரத்துக்குத் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடருவதற்கு இறுதியில் அனுமதிக்கப்பட்டாலும்- அரசு சாரா அமைப்புக்கள் மீது நெருக்குதலை அரசாங்கம் அதிகரித்துள்ள வேளையில் அது தங்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என அண்ட்ரூ கூ, மரியா சின் அப்துல்லா, இயோ யாங் போ ஆகியோர் கூறினர்.

மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று பாங்காக்கிற்கு சென்ற வழக்குரைஞர் கூ, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டார்.

“நான் குடிநுழைவு அதிகாரி ஒருவரை காண வேண்டியிருந்தது. அந்த அதிகாரி தொலைபேசியில் பேசி என்னைப் புறப்படுவதற்கு அனுமதித்தார். என் பதிவு மீது போலீஸ் கோப்பு ஒன்று இருப்பதாக அவர் சொன்னார்,” என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

அதிகாரிகள் அந்த நடவடிக்கையை அண்மையில் முடிவு செய்திருக்க வேண்டும் என அவர் கருதுகிறார்.

ஏனெனில் செப்டம்பர் 9ம் தேதி அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பிலிப்பீன்ஸுக்குச்  சென்றார்.

“அது பயணம் செய்வதற்கான என் உரிமையில் தேவையில்லாத இடையூறுகள்,” என அவர் வருத்தமுடன் கூறினார்.

ஜுலை 9ம் தேதி பேரணியின் போது ஏற்பட்ட சேதங்களுக்காக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் பெர்சே மீது வழக்குப் போட்டிருப்பதைத் தவிர தமக்கு எதிராக எந்த போலீஸ் வழக்கும் இல்லை என்றும் கூ குறிப்பிட்டார்.

அதே போன்று செப்டம்பர் 18ம் தேதி குறைந்த கட்டண விமான முனையம் வழியாக மகளிர் போராளியான மரியா நேப்பாளத்துக்கு சென்ற போது குடிநுழைவு அதிகாரிகள் அவரை நிறுத்தியுள்ளனர்.

“அவர்கள் என்னை 20 நிமிடங்கள் நிறுத்தி வைத்தனர். அவர்கள் இறுதியில் என்னை குடிநுழைவுச் சோதனைச் சாவடி வழியாகச் செல்ல அனுமதித்தனர். என் மீது போலீஸ் வழக்கு இருப்பதாக அவர்கள் எனக்குத் தெரிவித்தனர்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது மரியா சொன்னார்.

‘கிறுக்குத்தனமானது’

“பெர்சே நடவடிக்கைகள் தொடர்பில் என் மீது பல போலீஸ் விசாரணைகள் நடத்தபட்டுள்ளன. ஆனால் எந்தக் குற்றமும் எனக்கு எதிராகச் சுமத்தப்படவில்லை,” என மரியா சொன்னார்.

“இது எங்களுக்கு எதிரான கடுமையான அச்சுறுத்தலாகும். நாங்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை,” என்றார் அவர்.

அதே பிரச்னையை இயோவும் எதிர்நோக்கியுள்ளார். ஜோகூர்பாருவில் வசிக்கும் அவர் அடிக்கடி சிங்கப்பூருக்குச் செல்வது வழக்கமாகும்.

“சிங்கப்பூருக்குப் போகும் போது எனக்கு  இரண்டு அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. அனுமதியைப் பெறுவதற்கு குடிநுழைவு அலுவலகத்திற்குச் செல்லுமாறு குடிநுழைவு அதிகாரிகள் என்னைப் பணித்தனர்,” என்றார் அவர்.

அந்த நடவடிக்கையை ‘கிறுக்குத்தனமானது’ என வருணித்த இயோ, குடிநுழைவு அதிகாரிகள் பெர்சே தலைவர்களைக் கண்டு பிடிப்பதற்குப் பதில்  தங்கள் வேலைகளைச் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.

“அவர்கள் அதனைச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். குடிமக்களை அச்சுறுத்த முயற்சி செய்கின்றனர் என்ற மோசமான தோற்றத்தை அது அவர்களுக்குத் தருகின்றது,” என்றார் அவர்.

“இது உண்மையில் பயனற்ற நடவடிக்கை. உண்மையில் சிரிப்பை ஏற்படுத்துகின்றது.”

 

TAGS: