‘மெகா கெண்டூரி’ குறித்து எம்ஏசிசி-இல் பக்காத்தான் புகார்

மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தமின் மகன் திருமணத்தில் அதிகாரத்திலும் அரசுப் பணத்தைச் செலவு செய்ததிலும் அத்துமீறல்கள் நிகழ்ந்திருக்கலாம் என பக்காத்தான் ரக்யாட், மலாக்காவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளது.

பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் (படத்தில் வலப்புறம் இருப்பவர்), மாநில மாற்றரசுக் கட்சி தலைவர் கோ லியோங் சான், மலாக்கா பாஸ் துணை ஆணையர் கமருடின் சிடிக் ஆகியோருடன் சென்று அப்புகாரைச் செய்தார்.

“மூன்று விவகாரங்கள் மீது முறையிட்டிருக்கிறோம்.  முதலாவதாக, முகம்மட் அலி,  திருமணத்துக்கு ரிம600,000 செலவிட்டதாக நேற்றைய மலாய் மெயிலிடம் தெரிவித்துள்ளார்-  இது முதலமைச்சரான அவரின் சக்திக்கு அப்பாற்பட்டது என நினைக்கிறோம்.

“இரண்டாவதாக,  மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழகம் (எம்எஸ்டிசி), ஊராட்சி மன்றங்கள் போன்ற அரசு அமைப்புகளும் அரசுப் பணமும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக  பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் தெரிவித்துள்ளதையும் அதன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

“மூன்றாவதாக, எம்எஸ்டிசி-இன் தலைமை செயல் அதிகாரி யூசுப் ஜந்தான் -மலாக்காவுக்கு முதலீட்டைக் கவர்வதுதான் அவரது பணி ஆனால், அவர் அதற்கு முரணாக திருமண ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட கூட்டத்துக்குத் தலைமையேற்றிருக்கிறார்”, என்றாரவர்.

எம்ஏசிசி அதிகாரிகளுடன் மூன்று மணி இருந்து வாக்குமூலம் வழங்கியதாக ஷம்சுல் இஸ்கண்டர் கூறினார்.

TAGS: