எம்பி: முதலில் ‘அவரை’ நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்; அது முடிவு செய்யட்டும்

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), ஆதாரங்கள் ஏற்புடையனவா என்பதை நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும். அதைக் காரணம் காட்டி மாநிலத் தலைவர் ஒருவர்மீது ஊழல் குற்றம் சுமத்தத் தயங்கக்கூடாது.

இவ்வாறு கூறிய டிஏபி கோபிந்த் சிங் டியோ,“ஒரு மாநிலத்தின் பணக்காரத் தலைவர்”மீது குற்றம் சாட்ட முடியாதபடி “பழைய சட்டங்கள்” தடுப்பதாக எம்ஏசிசி கூறியுள்ள காரணம் நகைப்புக்குரியது என்றார்.

“எம்ஏசிசி இப்படிப்பட்ட தலைவர்கள்மீது குற்றம் சாட்டப்படாமல் இருப்பதை நியாயப்படுத்த காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கக்கூடாது.  ஆதாரங்கள் ஏற்கத்தக்கவையா என்பதை முடிவுசெய்யும் விவகாரத்தை நீதிமன்றத்திடமே விட்டுவிட வேண்டும்.

“இருக்கும் ஆதாரங்களை வைத்து எம்ஏசிசி வழக்கு தொடுக்க வேண்டும்.  சட்டப் பிரச்னை காரணமாக நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தால் அதன்பின் என்ன செய்ய வேண்டுமோ அதை நாடாளுமன்றம் செய்யும்.

“ஆனால், முயற்சியே செய்யாமல், அந்த ஒரு காரணத்தைக் காட்டி வழக்கு தொடுக்காமலிருப்பது அபத்தம்”, என்று கோபிந்த் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கோபிந்த், குப்பாங் கிரியான் எம்பி சலாஹுடின் நேற்று தெரிவித்த ஒரு விவகாரம் குறித்து கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.

பெரும் பணக்காரரான மாநிலத் தலைவர் ஒருவர் மீது ஆறு விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மேலோட்டமான சட்டங்கள் காரணமாக அவர் மீது  நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று கடந்த வாரம் நாடாளுமன்றச் சிறப்புக்குழுவின் விளக்கக் கூட்டத்தில் எம்ஏசிசி தெரிவித்ததாக சலாஹுடின் கூறியிருந்தார். நாடாளுமன்றம்தான் சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியது.

சட்டங்கள் சரியில்லை என்பதற்காக ஒரு ஊழல் விவகாரத்தில் எம்ஏசிசி ஒன்றும் செய்யாமலிருப்பதை ஏற்பதற்கில்லை.

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றால், ஊழல் நடந்திருப்பது உங்களுக்குத் தெரியும், ஊழல் செய்தவர் யார் என்பதும் தெரியும்.ஆனால்,  உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

“இந்தக் காரணத்தைக் கேட்கையில் சிரிப்புத்தான் வருகிறது.இது வெட்கக்கேடான விசயம். இது எம்ஏசிசி-இன் செயல்பாட்டின்மீது ஐயம் கொள்ள வைக்கிறது”, என்றார்.

TAGS: