மாலைதீவுகளின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைதுசெய்யப்பட்டார்

மலைதீவுகளின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் அந்நாட்டு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியமையால் முன்னாள் அதிபர் நஷீட் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாலைதீவுகளின் தெற்கே உள்ள தீவொன்றிலிருந்து அவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

தன்மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்றும் நீதியான விசாரணை நடக்காது என்றும் கூறியபடி அவர் கடந்த வாரம் படகொன்றின்மூலம் தலைநகரிலிருந்து தப்பிச்சென்றிருந்தார்.

மாலைதீவுகளில் கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த முதலாவது ஜனநாயக ரீதியான தேர்தல்களில் மொஹமட் நஷீட் வெற்றிபெற்றிருந்தார்.

கடந்த பெப்ரவரியில் ஆட்சியிலிருந்து விலகிய அவர், தான் பலவந்தமாக பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

அவரது ஆதரவாளர்கள் தலைநகரில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.