மசீசவால் முடியும்; மஇகா முடியாது: ஏன் செல்லாக் காசா?

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஈப்போ பாராட் உறுப்பினர் குலேசேகரனின் கேள்விக்கு விடையளிக்கும் போது ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலத்தைப் பெறுவதற்கான பணியை இப்பொழுது மேற்கொண்டு வருவதாக  துணைக்கல்வி அமைச்சர்  டாக்டர் வீ கா சியோங் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

“பிரதமரின் அறிவிப்புக்கு 10 மாதங்கள் கழித்து நிலத்துக்கு கோரிகையா? அப்படியானால் 14 வது பொதுதேர்தலுக்கும் இந்தியர்களின் வாக்கு சீட்டு அவசியம்  என்றால்தான் பள்ளி கட்டடத்திற்குப் பட்ஜெட் போடுவார்களா?”, என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வினவினார்.

ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரதமர்  அறிவிப்புவரும் வரை பாரிசானின் பங்காளியான ம.இ.கா  ஏதுமே செய்யவிலையா அல்லது அதன்  அமைச்சர் , துணையமைச்சர்கள் பேச்சுக்கு  அரசாங்கத்தில் எந்த மதிப்பும் இல்லையா? சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வழங்கி விட்டபின், அதற்கான கடிதங்களும், கோரிக்கைகளும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் ம.இ.கா வின் மத்திய அமைச்சர், துணை அமைச்சர்கள்  உட்பட கல்வி அமைச்சுக்கும் அனுப்பியது என்ன ஆயிற்று?

எப்படிப்பட்ட அவசரமாக,  அவசியமாக இருந்தாலும், ஒரு தகனக் கொட்டகையை நிர்மாணிக்கக்கூட அறிவிப்பு  பிரதமரிடமிருந்துதான் வர வேண்டும் என்ற அம்னோ கலாச்சாரத்துக்கு அடிமைப்பட்டவர்கள் ம.இ.கா அமைச்சர்கள் என்பதனையாவது ஆமோதிப்பார்களா?  இந்தியர்களின் வாக்குகளைக்  கவரக் கடந்த 55 ஆண்டுகளாக வாக்குறுதிகளைத் தந்தே அவர்களை ஏழையாக்கிவிட்டீர்கள். இனியும் ஏமாற்ற வேண்டாம் என்று  ம.இ.கா தலைவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவரும் கோரிக்கை விடுத்தார்.

கடந்த 27-06-2011ல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகள் மீதான வட்ட மேஜை மாநாட்டில், நகர்ப்புறங்களில் தமிழ் பள்ளிகள் நிறுவுவதில் பாரிசான் அரசாங்கம் பாரமுகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினேன். அன்று அக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸ்ரி அசிசுடன் ம.இ.காவை பிரதி நிதித்து இரண்டு துணை அமைச்சர்களான டத்தோ தேவமணியும், டத்தோ சரவணனும் கலந்துகொண்டனர்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட டத்தோ நஸ்ரி  இந்நாட்டில் தமிழ்ப்பள்ளி விவகாரங்களில் இந்தியச் சமுதாயம் ஒன்று பட்டு செயல் பட்டால் அதற்கான பயனை எதிர்பார்க்கலாம் என்றார்.

நாங்கள் அரசியல் ரீதியாக மட்டுமின்றி அரசு சாரா அமைப்புகளின் மூலமும்  நெருக்குதலும் கொடுத்தாகி விட்டது. நிலத்தை மாநில அரசு வழங்கினாலும், ம.இ.கா மூலமாக கட்டடத்திற்கான வேலைகள் நடைபெற வேண்டும், இச்சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக எங்கள் ஒத்துழைப்பை வழங்கினோம், ஆனால் மீண்டும் பழைய பல்லவியா!  இப்பொழுதுதான் நிலத்துக்குக்  கோரிக்கை வைப்பதாக அறிக்கை விடுகிறார். அதற்குள்  அடுத்த தேர்தல் முடிந்து விடும், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிறாரா துணைக்கல்வி அமைச்சர்  டாக்டர் வீ கா சியோங்.

கிள்ளான்  தாமான் சொந்தோசா, கம்பம் ஜாவா,  பண்டமாரன் கோலக்கிள்ளான் போன்றப்  பகுதிகளில் அதிகமான  இந்தியர்கள்  வசிக்கின்றனர். அங்கிருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு செல்லும் சுமார் ஆறு  ஆயிரம் மாணவர்கள் இட நெருக்கடியை எதிர் நோக்குகின்றனர்.   அந்த  பகுதிகளில் இருக்கும் நான்கு தமிழ்ப்பள்ளிகளும் மேற்கொண்டு மாணவர்களை எடுக்க முடியாமல்  தவிக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு  இக்கட்டுக்குத் தீர்வுக்கான சிலாங்கூர் பக்காத்தான் அரசு 2.7 ஏக்கர் நிலத்தை 2009ம் ஆண்டிலேயே அங்கீகரித்து விட்டது. அதில் ஒரு தமிழ் பள்ளிக்கூடம் கட்டப் பிரதமர் அங்கீகாரம் வேண்டுமா? மற்ற மாநிலங்களிலுள்ள சீனப்பள்ளிகளை மீண்டும் சிலாங்கூரில் கட்ட மசீசவால் அனுமதி வாங்கமுடியும், ஆனால் நாட்டில் ஏற்கனவே  மூடு விழா கண்டுவிட்ட 600 க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒரு தமிழ்ப்பள்ளியின் லைசன்சை கூட இந்த புதிய பள்ளிக்கு பயன் படுத்த முடியாதா? ஏன் இந்தியர்களுக்கு வேறு சட்டமா?

அப்படியானல், இந்த நான்கு  தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலிருந்தும்  தங்கள் பிள்ளைகளை அனுப்பும் தமிழர்களின்  உணர்வுகளுக்கும், வாக்காளர்களின் கோரிக்கைகளுக்கும் பாரிசான் மதிப்பளிப்பதில்லையா? மதிப்பளித்திருந்தால் நிலம் தயாராக இருப்பதனைப் பயன் படுத்திப், பள்ளி கட்டுமானத்திற்குத் தயார் படுத்தியிருக்க வேண்டாமா?

இல்லை ம.இ.கா தலைவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்து விட்டனர். ஆனால், மத்திய அரசாங்க அதிகாரிகளும், கல்வி அமைச்சரும், பாரிசான் அரசாங்கமும் ம.இ.கா தலைவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிப்பதில்லை என்கிறார்களா? சாக்கு போக்குகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தியச் சமுதாயத்தின் மீது பிரதமருக்கு உண்மையாக அக்கறை இருந்தால் உடனே பள்ளி கட்டுமானத்தைத் தொடங்க வேண்டும் என்றார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.