வட-மேற்கு பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல்;15 பேர் பலி

வட-மேற்கு பாகிஸ்தானில் கடைத்தெரு ஒன்றில் நடந்துள்ள கார்க் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

கைபர் பழங்குடிப் பகுதிக்கு அருகில் தாரா ஆதம் கெல் நகரில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாலிபன்களுக்கு எதிராக போராடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த அரச-ஆதரவு இராணுவ துணைப்படையை இலக்குவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

உள்ளூர் மருத்துவமனைகளில் வசதிகள் இல்லாமையால் அருகிலுள்ள நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு காயப்பட்டவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் உரிமை கோராதபோதிலும், இந்தப் பகுதியில் முன்னர் நடந்துள்ள தாக்குதல்களை தாலிபன்களே நடத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உள்ளூர் ‘சமாதானக் குழு’ ஒன்றின் பணிமனையின் முன்னால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் முன்னர் தாலிபன்களுக்கு எதிராக போராடப் பயன்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது உள்ளூர் மூத்த பிரஜைகளையும் அரசாங்கத்தையும் ஆதரிக்கும் குழுவாக மாறிவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று தாக்குதல் நடந்த நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-BBC