தாலிபன்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு பிரிட்டனில் சிகிச்சை

பாகிஸ்தானில் பெண் பிள்ளைகளின் கல்விக்காக குரல் கொடுத்துவந்ததால் தாலிபன் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுஃப்சாய் (14 வயது சிறுமி) மேலதிக சிகிச்சைகளுக்காக பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

பர்மிங்ஹாம் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ள மலாலாவுக்கு தலையில் மண்டையோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிதைவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

அவரது மூளைப் பகுதியை சீரமைக்கும் சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தான் சுவாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த மலாலா தனது பள்ளிக் கூடத்திலிருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, அவரை தாலிபன் துப்பாக்கிதாரிகள் தலையில் சுட்டனர். இத்தாக்குதலை தாலிபன்கள் பயங்கரவாத அமைப்பு நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டுள்ளது.

“மலாலா உயிர்பிழைத்தாலும் அவரை விடாமல் மீண்டும் தாக்குவோம்” என்றும் தாலிபன்கள் பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

ராவல்பிண்டி இராணுவ மருத்துவமனையில் இதுவரை சிகிச்சை பெற்றுவந்த மலாலாவின் நிலைமை அடுத்துவரும் நாட்களில் ‘மோசமாக’ இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

மலாலாவை பிரிட்டனுக்கு கொண்டுவருவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் விமானத்தையும் மருத்துவர் குழுவொன்றையும் அனுப்பி உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-BBC