மலேசியாகினிக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு

மலேசியாகினிக்கு செய்தித்தாள் வெளியிடும் உரிமம் கொடுக்க மறுத்த உள்துறை அமைச்சின் முடிவைத் தள்ளுபடி செய்த கோலாலும்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகமும் அமைச்சும் மேல்முறையீட்டைப் பதிவு செய்துள்ளன.

அதை ஏஜி அலுவலகத்தின் சிவில் வழக்குப் பிரிவுத் தலைவர் அசிசா நவாவி இன்று உறுதிப்படுத்தினார்.

“கேஎல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம்”, என்று அசிசா கூறினார்.

அக்டோபர் முதல் நாள், மலேசியாகினியின் விண்ணப்பத்தை நிராகரித்த உள்துறை அமைச்சரின் முடிவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஆபாங் இஸ்கண்டார் ஆபாங் ஹாஷிம், அமைச்சின் முடிவு “முறையற்றது, நியாயமற்றது” என்றார்.

“அம்முடிவு வாதியின் கருத்துச் சொல்லும் உரிமையைப் பாதிக்கிறது. அதில் உரிமத்துக்கு விண்ணப்பம் செய்வதும் அடங்கும். அது அரசமைப்பு போற்றிப் பாதுகாக்கும் ஓர்  அடிப்படை உரிமையாகும்”, என்று  நீதிபதி ஆபாங் இஸ்கண்டார் தமது வாய்மொழித் தீர்ப்பில் குறிப்பிட்டார்.