ரபிஸி: என்எப்சிமீது வழக்குத் தொடுத்து பணத்தைத் திரும்பப் பெற இயலாது

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றால்கூட அதனிடமிருந்து அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி.

ஏனென்றால் என்எப்சி பணத்தில் பெரும்பகுதி அதன் இயக்குனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது.

என்எப்சி-இடம் சொத்து அதிகமில்லை. அதனால் அரசாங்கத்தின் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்  நொடித்துப் போய்விட்டதாக, கடனைத் தீர்க்க வகையில்லை என அது கையை விரிக்கக்கூடும். அந்நிலையில் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது போகும் என்று ரபிஸி கூறினார்.

அரசாங்கத்துக்கு என்எப்சியில்தான் பங்கு உண்டு. ஆடம்பர கொண்டோமினியம் வாங்கிய நேசனல் மீட் அண்ட் லைப்ஸ்டோக் நிறுவனம் போன்ற அதன் சகோதர நிறுவனங்களில் பங்குரிமை இல்லை. எனவே அவற்றைத் தொட முடியாது.

அதனால்தான், அரசாங்கம் முன்னாள் அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தாரான என்எப்சி தலைவர், இயக்குனர்களிடம் தனிப்பட்ட உத்தரவாதம் கோர வேண்டும் என்றவர் சொன்னார்.

“ஷரிசாட்டிடமும் அவரின் குடும்பத்தாரிடமும் தனிப்பட்ட உத்தரவாதம் பெற வேண்டுமென பிகேஆர் முன்பே வலியுறுத்தியுள்ளது….அப்போதுதான் கடனுக்காக அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும்”, என்று ரபிஸி ஓர் அறிக்கையில் கூறினார்.

என்எப்சி கடனைத் திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டப்படவில்லை

ரபிஸி, என்எப்சிக்கு எதிராக சிவில் வழக்கு தொடுத்து ரிம250மில்லியன் கடனைத் திரும்பப் பெறுவது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருவதாக 2011 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறியிருப்பதன்மீது கருத்துரைத்தார்.

சிவில் வழக்கு தொடுப்பது பணத்தைத் திரும்பப் பெறுவதில் அரசாங்கத்துக்கு “உள்ளார்ந்த அக்கறை இல்லை” என்பதைத்தான் காண்பிக்கிறது  என்றாரவர்.

“ (அது) அவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் போக்கைத்தான் காண்பிக்கிறது. அதாவது என்எப்சிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தாமதப்படுத்தப் பார்க்கிறார். அடுத்த தேர்தலில் பிஎன் வெல்லும் அதன்பின் இவ்விவகாரத்தையே இல்லாமல் செய்துவிடலாம் என்றவர் நினைக்கிறார்”, என்று ரபிஸி கூறினார்.

அரசாங்கம் என்எப்சிக்கு எளிய நிபந்தனைகளில் ரிம250மில்லியன் கடன் கொடுத்தது. ஆனால், அதில் ஒரு பகுதியைத்தான் அந்நிறுவனம் அதன் செயல்பாட்டுக்குப் பயன்படுத்தியது.

இப்போது கொடுத்த கடனைத் திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: