கொள்ளையனை முறியடித்த 82 வயதான பாட்டி

ஆஸ்திரியாவில் கிராம வங்கி ஒன்றைக் கொள்ளையிட துப்பாக்கி , மற்றும் கைக்குண்டுடன் வந்த கொள்ளையன் ஒருவனை , 82 வயதான பாட்டி ஹெர்த்தா வாலெக்கர் என்பவர் தன்னந்தனியாக முறியடித்தார்.

கிராம வங்கி ஒன்றை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்று கொண்டிருந்த இந்த கொள்ளையனின் பின் புறம் பதுங்கி முன்னேறிய, ஹெர்த்தா வாலெக்கர், அந்தக் கொள்ளையனின் முகமூடியைக் கிழித்தெறிந்து, அவனிடம் இருந்த கொள்ளைப் பணத்தையும் பிடுங்கி, ” பணம் வேண்டுமென்றால் ஏதாவது வேலை செய்ய வேண்டியதுதானே ” என்று அவனைக் கடிந்தும் கொண்டார்.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெறுங்கையுடன் ஓடிய அந்தக் கொள்ளையனை, பின்னர் போலிசார் கைது செய்தனர்.

ஓய்வூதியம் பெறும் இந்த பாட்டி, பலர் கஷ்டபட்டு பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கையில், ஒருவர் மட்டும் அதைத் திருடுவதா என்ற கோபமே தன்னைத் தூண்டியது என்று கூறினார். ஒருவேளை தனது துணிச்சல், தொலைக்காட்சியில் போலிஸ் தொடர்பான பல நிகழ்ச்சிகளைப் பார்த்ததாலும் வந்திருக்கலாம் என்றும் அவர் கூறிக்கொண்டார்.