விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்: இலங்கையிடம் பான் கி மூன் வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்தப் போர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் போரினால் நிர்மூலமாக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுகுடியமர்த்துதல் பணிகள் இன்னும் முடிவு அடையவில்லை. அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இன்னும் முள்வேலிகளுடன் அமைந்துள்ள முகாம்களில் வசிக்கும் நிலைதான் உள்ளது.

பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு நிதியுதவி செய்துள்ளபோதிலும் தமிழ் மக்கள் வாழ்வில் இன்னும் விடியல் பிறக்க வில்லை. சிங்கள மக்களுடன் சமமாக வாழுகிற நிலையும் இல்லை. தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கும் இல்லை. உள்நாட்டுப் போரின்போது சிங்கள ராணுவத்தால் மனித உரிமை மீறப்பட்டது. அப்பாவித்தமிழ் மக்கள் கூட்டம், கூட்டமாக இனப்படுகொலைக்கு ஆளாகினர்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அப்போது, இலங்கையில் எல்லா மக்களும் சமநீதி, சமத்துவம் பெற்று இணக்கமான சூழலில் வாழ்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை தோட்டத்தொழில் துறை மந்திரி மகிந்தா சமரசிங்கே, அதிபர் ராஜபக்சேயின் சிறப்பு தூதராக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்றார். அங்கு அவர் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூனை சந்தித்துப் பேசினார். இதில் இலங்கையில் நடைபெற்று வரும் குடியமர்வு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பான் கி மூனின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சிறப்புத்தூதர் மகிந்தா சமரசிங்கே சந்தித்தார். மறுகுடியமர்வு தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார். அதை பான் கி மூன் கவனத்தில் கொண்டார். மேலும், இலங்கை இனப்பிரச்சினையில் விரைவான அரசியல் தீர்வு காணும்படி, மகிந்தா சமரசிங்கேயை பான் கி மூன் கேட்டுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

TAGS: