‘பிஎன்-ஆதரவு’ நடப்பு விவகார கையேட்டைத் தற்காத்துப் பேசுகிறார் ரயிஸ்

தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அவரது அமைச்சு வெளியிட்டிருக்கும் நடப்பு விவகாரங்களை விளக்கும் கையேடு அரசாங்கச் செலவில் பிஎன்னுக்கு ஆதரவாக நடத்தப்படும் ஒரு பிரச்சாரம் என்று கூறப்படுவதை மறுக்கிறார்.

“அது ஒரு குறுகிய, தப்பான கண்ணோட்டம். விவகாரங்கள் பற்றி விளக்குவது அமைச்சின் வேலை. கூட்டரசு அரசாங்கத்துக்கு அவதூறு கற்பிக்கப்படுகிறது அல்லது சிலாங்கூர் நீர் விநியோகத்தில் ஒரு பிரச்னை என்றால் அது பற்றி விளக்கமளிப்போம்.

“அது தப்பா? இல்லையே. தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அப்படிக் கூறவில்லை என்கிறபோது மாற்றரசுக் கட்சி மூடிக்கொண்டிருக்க வேண்டும்.

“கணக்காய்வாளர் அதிகாரமீறல் என்று  கூறியிருந்தால் அதைப் பற்றி விசாரிப்போம்”, என்றார்.

அமைச்சின் சிறப்பு விவகாரத் துறை, அரசாங்கத்துக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் அமைந்த பல விவகாரங்களுக்கு விளக்கமளித்து 322-பக்கக் கையேடு ஒன்றை  ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிட்டிருந்தது.

அதில், தியோ பெங் ஹொக் மரணம், பெர்சே 3.0 பேரணி, அன்வார்-சோரோஸ் தொடர்பு, ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல், லினாஸ் அரிய மண் சுத்திகரிப்பு ஆலை, தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) முதலிய விவகாரங்கள் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Jasa வலைத்தளத்தில் இந்தக் கையேட்டைக் காணலாம்.

TAGS: