ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைப்பு: DBKL பின்வாங்கியது

கோலாலம்பூர் ஜாலான் பி. ரமலியில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீவரர் காளியம்மன் கோயில் அக்டோபர் 25 ஆம் தேதி வாக்கில் உடைக்கப்படும் என்று கோயில் நிருவாகத்திற்கு அனுப்பியிருந்த நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) இன்று ஒப்புக்கொண்டது.

(காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)

கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் தேதி கோயிலுக்கு அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொள்ளும் கடிதத்தை இன்று பிற்பகல் மணி 3.00 க்கு மாநகர் மன்றம் கோயில் தலைவர் ஆர். எ. பாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.

101 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயில் உடைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இன்று காலை மணி 11.00 க்கு ஜாலான் ராஜா லாவுட்டிலுள்ள மாநகர் மன்ற தலைமயகத்திற்கு முன்பு மக்கள் கூடினர்.

ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை உடைப்பதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் விடுத்துள்ள நோட்டீஸ் தீய நோக்கம் கொண்டது என்று எம். மனோகரன் சாடினார்.

“இந்நடவடிக்கை இந்திய சமூகத்தை அவமதிப்பதாகும். 2008 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முன்னர் கம்போங் ஜாவா கோவில் உடைக்கப்பட்டது. இப்போது, கோலாலம்பூரில் 101 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் கோயிலை இவ்வாண்டு தீபாவளிக்கு முன்னர் உடைக்க நோட்டீஸ் கொடுத்திருப்பது டிபிகேஎல்லின் ஆணவத்தைக் காட்டுகிறது”, என்று மனோகரன் கூறினார்.

சுமார் 60 பேர் கூடியிருந்த அக்கூட்டத்தில் பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன், புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் போங் கின் லுன், செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வை ஆகியோருடன் போர்ட்டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் ரவியுடன் இதர அரசு சார்பற்ற அமைப்பின் உறுப்பினர்களும் இருந்தனர்.

கோயில் உடைப்பதற்கு எதிரான மகஜரை கூட்டரசு பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் மற்றும் கோலாலம்பூர் டத்தோ பண்டார் ஆகியோரிடம் வழங்குவதற்கு முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மணி 11.00 க்கு மேலாகியும் அமைச்சரும் டத்தோ பண்டாரும் மகஜரை பெற்றுக்கொள்ள வரவில்லை என்பதோடு அவர்கள் அங்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் எம். சரவணன் மகஜர் வழங்கவிருப்பவர்களைச் சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

அங்கு கூடியிருந்த மக்கள் ஏகமனதாக துணை அமைச்சரை சந்திக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். மனோகரனும் சுரேந்திரனும் அமைச்சரும் டத்தோ பண்டாரும் தங்களைச் சந்திக்க வரும் வரையில் தாங்கள் அங்கிருந்து போகப்போவதில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரியப்படுத்தினர். மேலும், துணை அமைச்சரை சந்திக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை மாநகர் மன்ற அதிகாரிகளிடம் தெளிவாகக் கூறினர்.

அமைச்சர் மற்றும் டத்தோ பண்டார் ஒப்புக்கொண்டவாறு தங்களைச் சந்திக்க வேண்டும் அல்லது கோயிலை உடைப்பதற்கு அளிக்கப்பட்டுள்ள நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மனோகரனும் சுரேந்திரனும் மாநகர் மன்ற அதிகாரி ஷாலான் என்பவரிடம் திட்டவட்டமாக கூறினர்.

இக்கோரிக்கை விடுக்கப்பட்ட பின்னர், மாநகர் மன்ற துணை இயக்குனர் அலியாஸ் பின் மார்ஜோ கூட்டத்தினரைச் சந்தித்தார். அச்சந்திப்பில் கோயிலை உடைப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள நோட்டீஸை திரும்பப் பெற்றுக்கொள்ளும் கடிதத்தை இன்று பிற்பகல் சரியாக மணி 3.00 க்கு கோயில் தலைவர் பாலகிருஷ்ணன் மாநகர் மன்றத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அலியாஸ் மனோகரனிடம் உறுதியளித்தார்.

இவ்வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட கூட்டத்தினரும் இதரத் தலைவர்களும் இதனை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினர்.

TAGS: