பக்காத்தான் மலேசியாவை அழிக்கும் பட்சத்தில் மீட்சிக்கே வழியில்லை: பிரதமர் எச்சரிக்கை

பக்காத்தான் ரக்யாட் அரசாங்கம் அமைத்து திறம்பட ஆட்சி செய்யத் தவறி நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினால் அதிலிருந்து மீள்வதற்கு வழி இருக்காது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று எச்சரித்தார்.

“அந்த அபாயத்தை எதிர்கொள்ளலாமா?  நம் எதிர்காலத்தை நாமே பணயம் வைக்கலாமா? சிலர், பரவாயில்லை, அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவர்களை மாற்றுவோம் என்கிறார்கள்.

“ஐந்தாண்டுகள் வேண்டாம் ஓராண்டிலேயே நாட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவார்கள். பொருளாதாரம் செயல்குன்றிப் போகும், பங்குச் சந்தை விழும்”. நஜிப், இன்று மசீச-வின் 59ஆவது ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது இவ்வாறு கூறினார்.

1997-ஆம் ஆண்டு நிதி நெருக்கடியை நினைவுறுத்திய நஜிப், “அப்போதைய நிதி அமைச்சர் யார்? நம் இறையாண்மையை பன்னாட்டு பண நிறுவனத்திடம் (ஐஎம்எப்) அடகு வைக்க விரும்பியர் யார்?”, என்று வினவ கூட்டத்தினர் “அன்வார்” என்று பதில் குரல் கொடுத்தனர்.

“(முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதிர்தான் நாட்டைக் காப்பாற்றினார். ஐஎம்எப் உதவி வேண்டாம், எங்கள் வழியிலேயே தீர்வு காண்போம் என்றோம். அதுதான் பிஎன்”, என்றாரவர்.

எனவே, சாதனை செய்யும் அரசாங்கத்தை, அனுபவம் வாய்ந்த அரசாங்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை மசீச மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நஜிப் வலியுறுத்தினார்.

TAGS: