மசீச டிஏபி-யைக் காட்டிலும் மேலானது என்கிறது பெர்க்காசா

சீச வேட்பாளர்கள் உட்பட பிஎன் -னுக்கு வாக்களிப்பது டிஏபி-யை ஆதரிப்பதைக் காட்டிலும் மேலானது என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார்.

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கின் ஹுடுட் கருத்துக்களை பெர்க்காசா குறை கூறியுள்ளது, அந்த பிஎன் கட்சியை எதிர்ப்பதற்கு போதுமான காரணத்தை தரவில்லை என அவர் மேலும் கூறினார்.

“நாம் பிஎன் அல்லது பக்காத்தான் ராக்யாட்டை தேர்வு செய்ய வேண்டும். எல்லாவற்றையும் மதிப்பீடு செய்த பின்னர் மசீச டிஏபி-யைக் காட்டிலும் பல அம்சங்களில் மேலானது என நாங்கள் முடிவுக்கு வந்துள்ளோம்.”

“சுவா கருத்துக்கள் மீதான எங்கள் அறிக்கை நினைவூட்டலே. மசீச தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். நாங்கள் ஒப்புக் கொள்ளாத போது நினைவுட்டலை வெளியிடுகிறோம். ஆனால் அது நாங்கள் எதிரிகள் என்ற அர்த்தத்தை அது தரவில்லை,” என அவர் சொன்னதாக மலாய் மொழி நாளேடான சினார் ஹரியானில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இப்ராஹிம் நேற்று ஷா அலாமில் நடைபெற்ற சிலாங்கூர் பெர்க்காசா சிறப்பு பொதுக் கூட்டத்தில் பேசினார்.

ஹுடுட் விவகாரத்தை டிஏபி தொடர்ந்து எழுப்பி வந்ததால் மசீச தனது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

“சீனர் ஆதரவை நிலை நிறுத்த ஹுடுட்-டுக்கு எதிராக மசீச பேச வேண்டியிருந்தது. ஆனால் எந்த மசீச தலைவரும் ‘என் சடலத்தின் மீது’ என்று சொல்லவில்லை. ஆனால் டிஏபி தலைவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கின்றனர்.”

“உண்மையில் அம்னோ தலைமைத்துவத்தை மசீச நீண்ட காலமாக ஏற்றுக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பாஸ் தலைமைத்துவத்தையும் இஸ்லாமிய நாட்டை அமைக்கும் எண்ணத்தையும்  டிஏபி ஏற்கவில்லை. அந்த இடத்தில் தான் டிஏபி மசீச-விடமிருந்து வேறுபடுகிறது,” என்றார் இப்ராஹிம்.

பிஎன் வேட்பாளர்களுக்கு அவர்கள் மசீச அல்லது மஇகா அல்லது இதர உறுப்புக் கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்  ஆதரவு திரட்டுமாறு அவர் அனைத்து பெர்க்காசா உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

அந்தச் சிறப்புப் பொதுக் கூட்டத்தை சிலாங்கூர் பிஎன் தொடர்புக் குழுத் துணை தலைவர் நோ ஒமார் தொடக்கி வைத்தார்.

 

TAGS: