பத்துமலை கோயிலுக்கு ஆபத்து: திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது பாக்கத்தானா; பாரிசானா?

கோலாலம்பூர் பத்துமலை குகைக்கோயிலுக்கு எந்த ஆபத்தையும் பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு கொண்டு வரவில்லை என்பதைச் செம்பருத்தியிடம் சுட்டிக் காட்டிய சேவியர், ” கோயிலுக்கு ஆபத்து வராமல் பரிமரிக்க வேண்டிய பணியை கோயில் நிர்வாகம் முறையாக செய்துள்ளதா என்பதே நான் இன்று கேட்கும் முக்கிய கேள்வி”, என்றாரவர்.

இத்திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டில் அனுமதி கொடுத்தது பாரிசான் அரசாங்கம். ஆனால், இன்று ஆட்சேபம் தெரிவிப்பது பாக்கத்தானுக்கு எதிராக. இதன் நோக்கம் என்ன என்று வினவினார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

“ஆக, இந்து பக்தர்களால் கண்டிக்கப்பட வேண்டிவர், கோயில் நலனை கோட்டைவிட்ட மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர்  ஆர். நடராஜா என்பதை இந்திய மக்கள் அனைவரும்  தெரிந்துகொள்ள வேண்டும்.

“கோயிலுக்கு அருகில் எந்த ஒரு கட்டுமானத் திட்டமும் மேற்கொள்ளப்படும்முன் அக்கட்டுமான நிறுவனம், உத்தேசக் கட்டுமான திட்டம் குறித்து முறையாக பொது மக்களுக்குத் தெரிவிக்க விதி முறைகள் உண்டு. அதன்படி அந்நிறுவனம் அதற்கான விளம்பரப் பலகையை அக்கட்டுமான இடத்தில் அப்போதே நிறுவியிருக்க வேண்டும்” என்று அவர் செம்பருத்தியிடம் கூறினார்.

“அத்திட்டத்தினால் பாதிக்கப்படும் கோயில் அல்லது மற்ற சொத்துடமையாளர்கள் அவர்களின் நலன் எவ்வகையில் பாதிக்கப்படுகிறது என்பதைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்ததிற்கு  எழுத்து மூலமாக சமர்பிக்க வேண்டும் என்பது  விதி.

“அதன்பின் சம்பந்தப்பட்ட மாநகர் மன்றம் அல்லது மாவட்டமன்றம்  அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று சேவியர் எடுக்கப்பட வேண்டிய ஆட்சேப நடைமுறைகளை விவரித்தார்.

என்ன செய்து கொண்டிருந்தார் நடராஜா?

“2007 ஆம் ஆண்டிலிருந்து, இவ்வளவு காலமாக  கோயில் நடராஜா என்ன செய்து கொண்டிருந்தார்?

“இந்தச் சிறிய, சாதாரண வழிமுறையைப் பயன்படுத்தி ஒரு கட்டுமானத்தை சாதாரண கோயில்களே இன்று தடுத்து நிறுத்தும் போது, ஏன் மாபெரும் தேவஸ்தான நிர்வாகம் செய்யமுடியாது, செய்யவில்லை?, என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தார் சேவியர்.

பக்கத்தானை கேள்வி கேட்பதின் நோக்கம் என்ன? 

“இத்திட்டத்திற்கு 2007ம் ஆண்டு அன்றைய பாரிசான் ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதி குறித்து இன்றைய பக்காத்தான் அரசிடம் ஆட்சேபணை தெரிவிப்பதின் நோக்கம் என்ன?

“இப்போது கோயில் அருகில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பல கடைகள், வீடுகள் மற்றும் 29 மாடிக் கட்டடம் ஆகியவை  அனைத்துக்கும் அன்றே, ஒரு சேர சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் அனுமதி வாங்கியுள்ளார்”, என்பது தெரியாதா என்று சேவியர் கேட்டார்.

இன்றுதான் தெரிந்ததா?

இன்று மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர்  ஆர். நடராஜா பத்திரிக்கைகளுக்கு வழங்கியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ள ஆட்சேபணை, மறியல், சுற்றுச்சூழல் விதி, கோயில் பாதுகாப்பு ஆகிய அனைத்தும், அன்று அவருக்கு தெரியாமல் போனது வேடிக்கையாக இல்லையா என்று அவர்
கேட்டார்.

 

பரிதாபத்திற்குரிய பழனிவேல்!

“இத்திட்டம் குறித்து  பக்காத்தான் அரசுக்கு கண்டம் தெரிவிக்கும் மஇகா தேசியத் தலைவர் பழனிவேலின் செயல் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. உங்களைப்  போன்றவர்களை திண்ணைத் தூங்கிகள் என்றால் வருத்தப் படுகிறீர்கள். ஆனால் உங்கள் பாரிசான் ஆட்சிக்காலத்தில்  அங்கீகரிக்கப் பட்ட ஒரு திட்டத்திற்கு அப்போதே எந்த ஆட்சேபணையும் தெரிவிக்காமல் ஆறு ஆண்டுகளுக்குப்பின் இன்று, பக்காத்தானை குற்றம் சொல்லுவதும், கண்டிப்பதாக அறிக்கை விடுவதையும், நான் என்னவென்று வர்ணிப்பது?, என்று வருத்தமுடன் கூறினார் சேவியர்.

“இந்திய  சமூகத்தின் விவகாரங்களில் இது போன்று நீங்கள் கோட்டைவிட்ட பல நூறு விவகாரங்களுக்கு தீர்வுக்காணுவதே எங்கள் அன்றாட வேலையாக இருக்கிறது என்பதனை தெரிந்துக் கொள்ளுங்கள்.

“அதே வேளையில்,  புனிதமான கோயிலில் இருந்து கொண்டு பாகுபாடின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள், அரசியல்  சதுராட்டத்தில் இறங்க வேண்டாம்  என்று நடராஜாவை  எச்சரிக்கிறேன்”, என்றாரவர்.

“இந்திய சமூகத்தை என்றென்றும்  ஏமாற்றிக்கொண்டிருக்கலாம்  என்று கனவு காண வேண்டாம்”, என்று எச்சரிக்கை விடுத்த சேவியர்,  “பத்துமலை முருகன் கோயில் மீது அக்கறையுள்ள பக்தர்கள் கோயில் நலனுக்காக முதலில் உங்களைப் போன்றவர்களளை அகற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”, என்று அதிருட்டுக் கூறினார் டாக்டர் சேவியர்  ஜெயகுமார்.