ராபிஸி: பிஎன் ஆய்வாளாராக இருப்பதற்கு, ‘நொடித்துப் போகும்’ எனச் சொன்னாலே போதும்

பிஎன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் ஆய்வறிக்கைகளை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கேலி செய்துள்ளார். அந்த நீண்ட கால கூட்டணி, பக்காத்தான் ராக்யாட் முன் வைக்கும் எந்தத் திட்டம் அல்லது யோசனை மீது ‘நொடித்துப் போகும்’ என்ற சொல்லை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது என்றார் அவர்.

“ஆகவே இப்போது பிஎன் -னுக்கு பொருளாதார ஆலோசகராக இருப்பது மிக எளிது. ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட அதனைச் செய்து விடலாம். ஒரே ஒரு ஆய்வு மட்டுமே உள்ளது.”

“எந்த ஒரு பொருளாதாரக் கொள்கைக்கும் “நொடித்துப் போகும்” என்ற பதில் அளித்தால் போதும்.

நாங்கள் எங்கள் வாய்களைத் திறப்பதற்கு முன்னரே பிஎன் “நொடித்துப் போகும்” எனக் கூச்சல் போட்டு விடுகிறது.”

ராபிஸி நேற்று கோலாலம்பூரில் ராக்கெட்கினி ஏற்பாடு  செய்த பக்காத்தான் ராக்யாட் வரவு செலவுத் திட்ட கருத்தரங்கில் பேசினார்.

“பக்காத்தான் நிழல் வரவு செலவுத் திட்டத்தில் வருமானம் அல்லது செலவு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கருதக் கூடாது. திறமையாக, விவேகமாக செலவு செய்வதே அதன் முக்கியக் குறிக்கோளாகும்.”

அந்தக் கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டு 2011ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் காணப்படுவதாக அவர் சொன்னார்.

பக்காத்தான் மாநிலங்கள் சில பிஎன் மாநிலங்களைக் காட்டிலும் குறைவான வருமானத்தைப் பெறுகின்றன. என்றாலும் அவை திறமையான முறையில் செலவு செய்து பெரிய சேமிப்பை வைத்துள்ளன என்றார் அவர்.

“உதாரணத்துக்குச் சிலாங்கூரைப் பாருங்கள். 2011ம் ஆண்டு ஐந்து மில்லியன் மக்களைக் கொண்ட அதன் வருமானம் 1.6 பில்லியன் ரிங்கிட் ஆகும். ஆனால் அதன் உபரி 1.9 பில்லியன் ரிங்கிட் ஆகும்.”

“அதே வேளையில் ஒரு மில்லியன் மக்களைக் கொண்ட திரங்கானுவின் வருமானம் எண்ணெய் காரணமாக 2.3 பில்லியன் ரிங்கிட் ஆகும். ஆனால் அதன் கடன் அளவு 233 மில்லியன் ரிங்கிட் ஆகும்.”

“திரங்கானு ஒரு மில்லியன் மக்களுக்கு ஆண்டுதோறும் 2 பில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்கிறது. ஐந்து மில்லியன் மக்களைக் கொண்ட சிலாங்கூர் 1.4 பில்லியன் ரிங்கிட்டை மட்டுமே செலவு செய்கிறது,” என்றார் ராபிஸி.

அந்தக் கருத்தரங்கில் கோத்தா ராஜா எம்பி டாக்டர் சித்தி மரியா மாஹ்முட்-டும் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சண்டியாகோவும் பேசினார்கள். ‘மக்கள் பணத்தை பக்காத்தான் எப்படிச் செலவு செய்யும்’ என்பது கருத்தரங்கின் தலைப்பாகும். கருத்தரங்கிற்கு டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங் அனுசரனையாளராக இருந்தார்.

 

TAGS: