நீதிமன்றத்தில் கிர் தோயோ, நான் வருந்துகிறேன் ( I’m sorry ) என ரோனி லியூ-விடம் சொன்னார்

பூச்சோங்கில் விபச்சார மய்யம் எனக் கூறப்பட்ட ஒர் இடத்தின் மீது ஊராட்சி மன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு லியூ தடையாக இருந்தார் எனத் தாம் அவதூறாகக் கூறியது மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோ, நடப்பு ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ-விடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அந்தத் தீர்வு நீதிபதி நிக் ஹாஸ்மாட் நிக் முகமட் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலும் தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கை ஒன்றை வாசித்ததின் வழி கிர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“Khir membongkarkan lapuran polis Liu Tian Khiew pernah bercampur tangan dalam urusan menghapuskan kegiatan pelacuran” ( போலீஸ் புகாரை கிர் அம்பலப்படுத்துகிறார். விபச்சார ஒழிப்பு விவகாரத்தில் லியூ தலையிட்டார்) என்னும் தலைப்பைக் கொண்ட செய்தியைத் தொடர்ந்து பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிமன்ற உறுப்பினரிடம் தாம் இதன் வழி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கிர் சொன்னார்.

அந்தச் செய்தி 2008ம் ஆண்டு மே 5ம் தேதி சைனா பிரஸ் நாளேட்டில் வெளியானது.

“அந்தச் செய்தியில் விபச்சார நடவடிக்கைகளுக்கான மய்யம் என நான் எண்ணிய பூச்சோங் ஹோட்டல் ஒன்றை மூடுவதற்கு சுபாங் ஜெயா நகராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் லியூ தடையாக இருந்தார் என நான் மறைமுகமாக குறிப்பிட்டேன்.”

“முற்றிலும் உண்மையில்லாத அத்தகைய நடவடிக்கைகளில் லியூ சம்பந்தப்பட்டுள்ளதாக தாம் கூறியதற்காக நான் லியூ-விடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அந்தச் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து லியூவுக்கு ஏற்பட்ட கடுமையான மன அழுத்தத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.”

அவருக்கு எதிராக விடுக்கப்பட்ட எல்லா அறிக்கைகளையும் மீட்டுக் கொண்டு நிபந்தனை ஏதுமின்றி அவரிடம் மன்னிப்புக் கேட்ட்கிறேன்,” என கிர் மேலும் சொன்னார்.

லியூ-வுக்காக ஆஜரான கோபிந்த் சிங் டியோ, அந்தத் தீர்வை அறிவித்ததுடன் செலவுத் தொகை தொடர்பில் ஆணை ஏதும் தேவையில்லை என விண்ணப்பித்துக் கொண்டார். அதற்கு நீதிபதி நிக் ஹாஸ்மாட் ஒப்புதல் அளித்தார்.

அந்த அறிக்கை வாசிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னர் கிர் லியூ-வுடன் கை குலுக்கினார்.