அயதுல்லா ஆட்சியை பின்பற்ற வேண்டாம் என பாஸ் கட்சிக்கு எச்சரிக்கை

பாஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் சமயத் தலைவர்களை குறைகூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் வைத்து அயதுல்லா கோமெய்னியின் கீழ் ஈரான் இருந்ததைப் போன்ற நிலையை பின்பற்றக் கூடாது என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் எச்சரித்துள்ளார்.

இல்லை என்றால் மலேசியாவில் ஊழல் நிலமை மேலும் மோசமடையும் என அவர் சொன்னதாகக் கூறப்படுகின்றது.

“பாஸ் கட்சியில் உள்ள பிரச்னை இது தான் என நான் எண்ணுகிறேன். இப்போது அவர்கள் அதிகாரத்தில் இல்லை. ஆனால் நாம் இப்போது பேசா விட்டால் தலைவர் அயதுல்லா குறைகூறல்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் தொடமுடியாத சூழ்நிலையிலும் இருந்த ஈரானிய நிலைக்கு நாம் சென்று விடுவோம்,” என அவர் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“தலைவர்களுக்கு அறிவுரை சொல்வதில் உலாமாக்களின் பங்கு” என்னும் தலைப்பில் அந்த மலாய் மொழி நாளேடு ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்கு ஒன்றில்  அவர் பேசினார்.

அஸ்ரி மலேசியாகினியின் மலாய் மொழிப் பகுதியில் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். எந்த ஒரு தலைவரும் பொது விவகாரங்களிலும் மக்கள் உரிமைகளிலும் தவறு செய்தால் அவர் வெளிப்படையாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்த ஆய்வரங்கில் சொன்னார்.

என்றாலும் அதனை தொழில் ரீதியாக செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் அவதூறுகள் மூலமாக அல்ல என்றும் அஸ்ரி கூறினார்.

இதனிடையே உலாமாக்கள் எல்லா நேரத்திலும் உண்மையை நிலை நிறுத்த வேண்டும் என அந்த ஆய்வரங்கில் பேசிய சிடிக் பாட்சில் கூறியதாகவும் சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“இப்போது ஆலோசகர்கள், கல்வியாளர்கள் என்னும் தங்களது கடமையை உலாமாக்கள் மறந்து விடுகின்றனர். உலாமாக்களின் முக்கிய அம்சம் இறைவனுக்கு அஞ்சுவதாகும். தங்களுடைய எஜமானர்களுக்கு அல்ல,” என்றும் அவர் சொன்னார்.

TAGS: