13ஆவது திருத்தத்தை இலங்கை நீக்கக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்பு

இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்யும் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அங்கே பல்வேறு தரப்புக்களிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய முயற்சிகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், இலங்கையில் அத்திருத்தத்தை ரத்துசெய்வதற்கான முன்முயற்சிகள் நடந்துவருவதை கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

இலங்கையுடனான உறவைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அல்லாது மக்கள் பிரச்னையாக அணுகவேண்டுமெனவும் மகேந்திரன் வற்புறுத்துகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும், 13 வது சட்டத் திருத்ததினை அமல்படுத்துவது அவசியம் என்றார். அத்திருத்தம் இந்தியானால் இலங்கையின் மீது திணிக்கப்பட்டது என்ற வாதத்தினை அவர் மறுத்தார்.

மேலும், இலங்கைத் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வழிசெய்ய இந்தியா மற்ற சார்க் நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

ரத்து செய்யும் முயற்சிகள் இலங்கையில் வலுப்பெறுமானால் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து அதனை எதிர்க்கும் எனவும் இரு தலைவர்களும் கூறினர்.

-BBC

TAGS: