இந்தியர்களிடையே பக்காத்தானின் செல்வாக்கை கீழறுப்புச் செய்ய நடராஜாவின் நாடகமா?

இன்றைய மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் பத்துமலையில் 29 மாடி கட்டத்திற்கு கொடுத்த இடைக்கால தடையுத்தரவை நீட்டிக்க செலயாங் நகராட்சி மன்றத்துக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உத்தரவிட்டுள்ளது.

அந்தத் திட்டம் மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்படும் என்ற சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசின் முடிவு, சிலாங்கூர் அரசு மக்கள் நலன் கருதும் அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

கடந்த தேர்தலில் பாடாங் ஜாவா, ரிம்பா ஜெயா மகாமாரியம்மன் ஆலயம் சிலாங்கூரில் அரசியல் மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. அதனால் இம்முறை பத்துமலை திருமுருகன் ஆலயத்துக்கு ஆபத்து என்ற போலி சங்கை ஊதி மக்களை ஏமாற்றி விடலாம் என்று  மணப்பால் குடிக்க வேண்டாம் என்று மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜாவை எச்சரிக்கிறேன்.

நாங்கள் இந்து  ஆலயங்களை மதிப்பவர்கள் என்பது நாடறிந்த விசயம். எந்தக் கட்டுமானமும் ஆலயத்திற்கு பாதகமென்றால், நீங்கள் செய்ய வேண்டியது, நகராட்சி மன்றத்துக்கு ஒரு புகார் கடிதம் அல்லது ஒரு கோரிக்கையை அனுப்ப வேண்டியதுதான். இன்றுவரை கோயிலில் இருந்து மாநில அரசுக்கு ஒரு மனுவும் வரவில்லை. ஆனால்,  வக்கீல் மூலம் கடித்ததை அனுப்பியுள்ள நடராஜாவின் செயல் எதைக்காட்டுகிறது?

பொது மக்கள் முருகனுக்குச் செலுத்தும் காணிக்கை எப்படியொல்லாம் பாழாகிறது என்பதனை உணர்த்துகிறது.  மாநில அரசு அதே பாணியில் சட்ட நடவடிக்கையில் இறங்கினால் என்னவாகும்? மாநில அரசு விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப் பிடிப்பதே, இந்து ஆலயங்கள் மீது, இந்திய மக்கள் மீது அது கொண்டுள்ள மரியாதையைக் காட்டுகிறது.

கடந்த திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜா பத்துமலை முருகன் ஆலயப் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசியல் அறிக்கை விட்டு வருவதை மக்கள் கவனித்திருக்கலாம்.

தனது கடமையை ஒழுங்காகச் செய்யாமல், ஆலயத்தின் அடிவாரத்தில் என்ன நடக்கிறது என்பதனைக் கூட அறிந்து கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள், கோவில் நலனைப் பற்றியும், சுற்றுச்சூழல் குறித்தெல்லாம் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது.

தன்னை ஓர் ஆன்மீக சேவையாளர் என்று கூறிக்கொள்ளும் நடராஜாவுக்கு பட்டம், பதவிகள் எதற்கு? அதுவுங்கூட  நாடகமா?

கடந்த மூன்று நாள்களாக நடராஜா நடத்திவரும் பத்திரிக்கை கூட்டங்களையும், பக்தர்களையும் பொதுமக்களையும் ஒன்றுகூட்டப் பத்திரிக்கைகளுக்கு விடும் அறிக்கைகள், விளம்பரங்கள், யார் பணத்தில் யாருக்கோ அரசியல் வெண்சாமரம் வீசும் வேலையாக இருக்கிறது என்பதை அனைத்து இந்தியர்களும் அறிவர்.

ஆலய தலைவரான அவர் சுலபமாக,  ஓர் ஆட்சேபணை கடிதத்தை செலாயாங் நகராட்சி  மன்றத்துக்கு  அனுப்பி தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு திட்டத்தை, பொது மக்களைக் கூட்டிக் கூட்டம் போடுவது எதற்கு?

இதற்கு மக்கள் ஆதரவு உங்களுக்கு தேவை என்றால், அந்த மக்கள் உங்கள் ஆலயத்தின்  தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் தேர்தல்களிலும் வாக்களிக்க வேண்டுமே. கூட்டத்துக்கு வரும் அனைவரையும் தேவஸ்தான  உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? நீங்கள்தான் காவி கட்டாத ஆன்மீக வாதியாச்சே, பதவி மற்றும் பட்டம் உங்களுக்கு எதற்கு? ஆலயத்தின் அடிவாசலில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ள நேரமில்லாதவர், அக்கறை இல்லாதவர், அந்த பொறுப்பை பொது மக்களில் யாராவது வகிக்க விட்டுவிடலாமே !

கடந்த 2007ஆம் ஆண்டு, அன்றைய பாரிசான் ஆட்சியில் வழங்கப்பட்ட 29 மாடி கட்டடத்திற்கு அனுமதி வழங்கிய பாரிசான் நேசனல் அரசின் செய்கைக்கு  இன்றைய பக்காத்தான் அரசிடம் ஆட்சேபணை தெரிவிப்பதின் நோக்கம் என்ன என்று கேட்டதற்கு, 28- 3- 2008 இல் பக்காத்தான் அனுமதியளித்துள்ளது என்கிறீர்கள். அனுமதிக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு மீண்டும் அனுமதி என்று ஒன்றில்லை. ஒரு திட்டம் குறிப்பிட்ட காலத்துக்குள் பூர்த்தியாக விட்டால், அத்திட்டத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்க,  நகராட்சி மன்ற  தலைவர் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்வார்கள்.

ஒரு திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிப்பதற்கான மனு மீண்டும் முழு நகராட்சி மன்ற விவாதத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை. அது போன்ற அரசாங்க நடைமுறைகளை உங்களைப் போன்ற கோட்டு போட்ட ஆன்மீக வாதிகள்  அறிந்திருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு  தெரியும்.

ஆனால், அந்த திட்டத்தை வைத்து மீண்டும் பக்காத்தானை சாடும் நடராஜாவுக்கு 8-3-2008 இல் ஆட்சி மாற்றம் மட்டுந்தான் தெரியுமா?

பக்காத்தான் உறுப்பினர்கள், செலயாங் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக 2008 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிதானே பதவியேற்றார்கள்.  அவர்களை எப்படி 28-3-2008 இல் நடைபெற்ற காலக்கெடு நீட்டிப்புடன் தொடர்பு படுத்துவது என்ற உணர்வே இல்லாமல் அறிக்கை விட்டிருப்பதே, இவர் ஒரு தலை  அரசியல் ராகம் பாடுகிறார் என்பதற்கு இன்னொரு சான்றாகும்.

எங்கள் சேவையை மதிப்பீடு செய்து  இருக்கிறீர்கள், வியாக்கியானம் செய்துள்ளீர்கள். அது உங்கள் உரிமை. இன்னும்  சில காலத்தில் எங்கள் சேவையை மதிப்பிட்டு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். அதற்கு நாங்கள் தயார்.

ஒரே ஒரு முறை கோலாலம்பூர் மகாமாரியம்மன் ஆலயத்தில் நீங்கள் நடத்தும் தர்பார் மீது மக்கள் விமர்சிக்க, அவர்கள் தீர்ப்பளிக்க விடுவீர்களா? நீங்கள் மீண்டும் அந்த நாற்காலியில் அமர முடியுமா என்று பார்ப்போம்.

கோலாலம்பூர் பத்துமலை கோயில் விவகாரம் சம்பந்தமாக மாவட்ட மன்றத்துடனும், மாநில சட்டத்துறையுடன் கலந்து ஆலோசித்து மாநில ஆட்சிக்குழு ஒரு நல்ல முடிவு எடுக்கும்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவரது அறிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

TAGS: