புதிய சூரபத்மனும் பத்துமலை முருகனும்

வள்ளி: கோமாளி, பத்துமலைக்குப் பங்கம் விளைவித்ததாக மக்கள் கூட்டணி மீது பாயும் நடராஜாவின் போக்கு சரியா?

கோமாளி: சிவனிடம் சாகா வரம் பெற்ற சூரபத்மன் என்ற அசுரனைக் கொல்ல, தனது நெற்றிக்கண் வழி முருகனைச் சிவன் உருவாக்க, பார்வதி வேல் வழங்க, அசுரன் ஓட்டம் எடுத்து மரமாகி மறைந்து கொண்டான். மரத்தைப் பிளந்ததில் ஒருபாதி மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது; மறுபாதி சேவலாகி முருகனின் கொடியில் சின்னமாகியது.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திலேயே (ஒரு பேச்சுக்காக) முருகன் வழிபாடு பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே முருகன் தமிழர்களுக்கு அறிவாற்றலுக்கும் வீரத்திற்குமான முழுமுதற் கடவுளாவார்.

அப்படிப்பட்ட முருகனுக்கு உலக சாதனை அளவிற்கு உருவம் கொடுத்தவர் 63 உறுப்பினர்களைக் கொண்ட மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் ஆர். நடராஜா. 140 அடி உயரமும் 3,720 டன் எடையும் கொண்ட முருகன் சிலையை மூன்று ஆண்டுகளில் நிர்மாணித்து 2006-ஆம் ஆண்டு  தைப்பூசத்தில் விழா நடத்தியவர்.

கடவுளுக்குச் சிலை அமைத்ததின் வழி அறிவு கிடைக்குமா?

நவம்பர் 25, 2007-ல் நடந்த இண்ட்ராப் போராட்டத்தின் போது தமிழர்களின் உரிமையைக் காக்க துணிந்து, நவம்பர் 24-ஆம் தேதி இரவு, ‘யாமிருக்க பயம் ஏன்’ என்ற புனித ஆற்றலைக் கொடுத்த முருகன் காலடியில் ஒன்று கூடிய மக்களை மகா மாரியம்மன் தேவஸ்தானம் காக்கத் தவறியது. நுழைவாயில் மூடப்பட்டதால் வாசலுக்கு வெளியில் சிக்கிய உரிமை போராட்டவாதிகள் போலிசாரின் கண்மூடித்தனமாக கண்ணீர்ப்புகை குண்டுகளுக்கும் ரசாயண நீர்ப் பாய்ச்சலுக்கும் ஆளானார்கள்; பலர் கைதானார்கள்.

ஆலயம் என்பது புனிதமானது; அல்லல்படும் வேளையில் பலருக்கு அதுவே  அடைக்கலம். இண்ட்ராப் உரிமைப் போராட்டத்தை உடைக்கவும் ஒடுக்கவும் நமது இனவாத அரசாங்கத்திற்குத் தோள்கொடுத்தது தேவஸ்தானம்.

1984-இல் அம்ரிட்சாரில் உள்ள சீக்கிய கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பிய இந்திரா காந்தி, 150 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 31-ல் தனது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களின் முப்பது தோட்டாக்களுக்குப் பலியானார். இப்போது சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரில் மசூதிகளில் அடைக்கலம் புகும் மக்கள் காக்கப்பட வேண்டும் என மலேசியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கூவுகின்றன. இது போன்ற நிலைப்பாடு உலக கடப்பாடாகும்.

2008-ஆம் ஆண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழா,  தேவஸ்தானத்தின் துரோகச் செயலைக் கண்டனம் செய்யும் வகையில் பொதுமக்களால் புறக்கணிக்கப்பட்டது.

63 உறுப்பினர்களைக் கொண்ட மகா மாரியம்மன் தேவஸ்தானத்தை வழிநடத்துபவர் அதன் தலைவர் ஆர். நடராஜா. 2008-ஆம் ஆண்டின் புறக்கணிப்பு அவருக்கும் அவரது குழுவினருக்கும் போதுமான பாடங்களைப் புகட்டவில்லை என்பது தொடர்ந்து தெளிவாகி வருகிறது. தைப்பூசம் என்பது ஒரு சமயப் பண்பாட்டு விழா. விரதம் எடுத்து காணிக்கை செலுத்தும் பக்தர்கள் மத்தியில் அரசியல் விளம்பரம் தேடுவதை இவர்கள் தங்களின் பாதுகாப்பு கவசமாக கருதுகிறார்கள்.

இலட்சக்கணக்கில் ஒன்று கூடும் மக்களைக் கொண்டு அரசியல் நடத்தும் மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் போக்கு கண்டனத்திற்குரியது. இப்படிக்கூடும் மக்களின் ஒருங்கிணைப்புக்குத் தாங்கள்தான் தலைமை என்ற மாயயை ஏற்படுத்தியுள்ளனர். அதன் பிரதிபலிப்பாக அப்படிக் கூடும் மக்களுக்கு எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொடுப்பது என்பது இவர்களது அரசியல் சித்து விளையாட்டாகும்.

உதாரணமாக, பிரதமருக்குப் பெரிய அளவிலான உருவப்படம் (கட் அவுட்) வைப்பது, உலக சாதனை என்ற நினைப்பில் மிகப்பெரிய பூமாலையைப் பிரதமருக்கும் அவரது துணைவியாருக்கும் போடுவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? பக்தி பரவசம் கொண்ட திருநாளை அரசியல் கேலிக்கூத்தாக்கும் இந்த தேவஸ்தானப் பட்டாளம், மக்களை மட்டும் முட்டாள்களாகக் கருதவில்லை. தாங்கள் முருகன் மீது கொண்டுள்ள பற்றையும் அருளையும் வெளிப்படுத்திவிட்டதாக தாங்களாவே நினைத்துக் கொண்டு மற்றவர்களையும் நினைக்கத் தூண்டுகின்றனர்.

தைப்பூசத்தை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை பிறகு ஒரு நாள் சொல்கிறேன்.

தற்போது உள்ள விடயம் பத்துமலை குகைக் கோயிலுக்கு ஆபத்து என்பதாகும். சிலாங்கூர் அரசாங்கம் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளைக் கொண்ட கட்டடம் நிர்மாணிக்க அனுமதி வழங்கியுள்ளது இதற்கு காரணமாகும்.

இது உண்மைதான். முதலில் தேசிய முன்னணி அரசாங்கம் 2007-இல் அனுமதி வழங்கியது. அவ்விதம் பெற்ற அனுமதி மீண்டும் புதிய அரசாங்கம் அமைத்த மக்கள் கூட்டணி ஆட்சியில் புதுபிக்கப்பட்டுள்ளது.

இதை மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் ஆர். நடராஜா கையாண்ட விதம்தான் கேள்விக்குறியாக உள்ளது.

எந்த ஒரு கட்டுமானத் திட்டமும் மேற்கொள்ளப்படும்முன் அக்கட்டுமான நிறுவனம், உத்தேசக் கட்டுமான திட்டம் குறித்து முறையாக பொது மக்களுக்குத் தெரிவிக்க அதற்கான விளம்பரப் பலகையை அக்கட்டுமான இடத்தில் நிறுவ வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது குற்றமாகும்.

எனவே இந்த 29 மாடி கட்டட திட்டத்தினால் பாதிக்கப்படுபவர்கள் செலாயாங் நகராட்சி மன்றத்திடம் 60 நாள்களுக்குள்  எழுத்து மூலமாக ஆட்சேபனையைத் தெரிவித்திருக்க வேண்டும். இதை 2007-இல் இண்ட்ராப் பேரணிக்கு கதவடைப்பு செய்த நடராஜா குழுவினர் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. பரவாயில்லை, ஏதோ காரணங்களால் செய்யவில்லை.

பொறுப்புள்ள ஒரு தேவஸ்தான தலைவராக அது சார்பாக சம்பந்தப்பட்ட இலாகாவுடன் தொடர்பு கொண்டு தொடர் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம். ஆனால், எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் நடராஜா. குகைக் கோயிலுக்கு  ஆபத்து; ஆபத்திற்குக் காரணம் சிலாங்கூர் அரசாங்கம் என்று மக்கள் கூட்டணி அரசாங்கத்துடன் போருக்குப் புறப்பட்டுள்ளார். இவரோடு சேர்ந்து மக்களை ஆட்டு மந்தைகள் என்று இன்றும் நினைக்கும் அரசியல்வாதிகளும் ஜால்ராக்களும் கூத்தடிக்கிறார்கள்.

63 உறுப்பினர்களைக் கொண்ட மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் ஆர். நடராஜா, அரசியலைக் கொண்டு தனது வலிமையை அசைக்க இயலாத அளவில் வைத்துள்ளார். பத்துமலையை இவரது பரம்பரைதான் ஆட்சி செய்யும். அதற்கு மஇகா- அரசியல்தான் இவருக்கு கவசமாக விளங்கும்.

மக்களின் மாற்றத்தால் மிரண்டுபோய் இந்த நாடகமா? இவர் புதிய சூரபத்மன் என்று மட்டும் யாரும் எண்ண வேண்டாம். மரமாகும் வித்தை இவருக்குத் தெரியாது. ஆனால், முருகனுக்கு  தெரியும் இவர்கள் தனக்கே  பஞ்சாமிருதம் கொடுக்கும் தன்மையுள்ளவர்கள் என்று.

அவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்த நாடகத்தில் யார் அம்மணமாக பவனி வருவார்கள் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.