பத்துமலை அரசியல் – முருகப் பெருமானே நீர் எந்த கட்சியப்பா?

அண்மை காலமாக பத்து மலையைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கும் ஆலய தலைவர் நடராஜா யாருக்காக, எதற்காக குதிரையில் ஏறியுள்ளார் என்பதை நம்மால் நன்கு அறிய முடியும். நம்மை முட்டாள் என்று எண்ணி இவ்வளவும் செய்கிறார்.

அன்று தமிழினத்தின் மானம் காத்திட பத்துமலையில் கூடிய தமிழினத்தை காவலர்களை வைத்து அடித்து வெளியே செல்லவும் விடாமல் தடுத்த ஒரு மானங்கெட்ட தலைவர்தான் இந்த நடராஜா.

கலை, கலாச்சாரம், பாரம்பரியம் காப்பாற்ற புறப்படுங்கள் என கூவி அழைக்கிறாரே, அப்படி என்னதான் இதுவரை காப்பாற்றியுள்ளார்கள். சமயம் காப்பாற்றப்படுவதில்லை. பணம் வசூலிக்கும் நோக்கிலும் வியாபார நோக்கிலும் பத்துமலை திருத்தலம் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு மாபெரும் உண்மையை அவர் தமது பத்திரிகை விளம்பரம் வாயிலாக கூறியுள்ளார். பத்துமலை ஒரு சுற்றுலா தலம், புராதன சின்னம், இயற்கை எழில்மிக்க இடம் இப்படி கூறியுள்ள அவர் எங்கேயும் பத்துமலை வழிபாட்டு இடம் என்று குறிப்பிடவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது பத்துமலையை வெறுமனே வருமானம் தரும் இடமாக நடராஜா கருதுகிறார் என்பது தான் உண்மை.

ஒரு தலைவர் என்ன செய்ய வேண்டும் என்பதை செய்ய தவறிய அவர், பத்திரிகை அறிக்கை விடுவது நியாயமாகாது. உண்மையான இந்துக்கள் இதைச் சிந்திக்க வேண்டும். இப்பொழுது ஆலயங்களும், தமிழ்ப்பள்ளிகளும் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை கண்டிக்க வேண்டும்.

42.7 மீட்டர் முருகன் சிலை எழுப்பப்பட்டவுடன் அது பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது அதனால் அது மறைக்கப்பட வேண்டும் என ஒரு சாரார் அப்பொழுதே கூறியது ஞாபகம் இருக்கிறதா?

நாம் எந்த அரசாங்கத்தையும் இப்பொழுது குறை கூறுவதில் அர்த்தமில்லை. எந்தவொரு கட்டுமான பணிகளும் நமக்குத் தடையாக இருப்பின் அதனை தடுக்கும் உரிமை சட்டம் நமக்கு வழங்கியுள்ளது. ஆக சட்ட பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகும். கூட்டம் கூட்டி, மறியல் செய்வது நமது பண்பல்ல.

ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சங்களை வருமானமாக பெறுகின்ற பத்துமலை திருத்தலம் சமூகத்திற்கு திருப்பித் தந்தது என்ன? எத்தனைக் காலம்தான் முருகன் பேரைச் சொல்லி நம்மை ஏமாற்ற போகிறார்கள்? முருகப் பெருமானே நீர் எந்த கட்சியப்பா?

அன்புடன்
மக்கள் நண்பன்.

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272