‘போலீஸ் துப்பாக்கிச் சூட்டு மரணங்களை புலனாய்வு செய்க- இல்லை என்றால் இன்னும் அதிகமானோர் மரணமடைவர்”

2007ம் ஆண்டு தொடக்கம் போலீஸ் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 298 பேர் கொல்லப்பட்டதை போலீசார் விசாரிக்க வேண்டும். இல்லை என்றால் அது போன்ற சம்பவங்கள் இன்னும் அதிகமாக நிகழும் என மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் எச்சரித்துள்ளது.

அந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் “நீதியை நாட்டி அங்கும் இங்கும் அலைய வேண்டியுள்ளது” என சுவாராம் ஒருங்கிணைப்பாளரான ஆர் தேவராஜன் கூறினார்.

“நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க குடும்ப உறுப்பினர்கள் ஏன் அலைய வேண்டும் ?  அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் முன்னர் எத்தனை மனுக்கள் சமர்பிக்கப்பட வேண்டும் ?

பதில்களை நாட வேண்டிய நிலையைக் குடும்பங்களுக்கு ஏற்படுத்தாமல் ஒவ்வொரு மரணமும் இயல்பாகவே விசாரிக்கப்பட வேண்டும் என தேவராஜன் சொன்னார்.

“போலீஸ் படை மீதான நம்பிக்கையை நிரூபிப்பதற்கு முழுமையான வெளிப்படையான புலனாய்வு அவசியமாகும்.”

நடப்பிலுள்ள ‘போலீஸ் விசாரணை போலீஸ் நடைமுறைக்கு” பதில்  போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாத காலஞ்சென்றவர்கள் மீது போலீசார் வெகு விரைவாக பழியைப் போட்டு விடுவது அதை விட மோசமானது என்றார் தேவராஜன்.

தாங்கள் தற்காப்புக்காக நடவடிக்கை எடுத்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறிக் கொள்கின்றனர்.

அத்துடன் கொல்லப்பட்டவர்கள் கிரிமினல்கள் என்றும் பாராங்கத்திகளைக் கொண்டு போலீசாரைத் தாக்கினர் என்றும் போலீசார் அடிக்கடி தெரிவிக்கின்றனர்.

“சீர்திருத்தங்கள் தோல்வி கண்டுள்ளதையே அந்த நடைமுறை பிரதிபலிக்கின்றது. அத்துடன் தனிநபர்களுடைய பாதுகாப்பு குறித்து போலீசார் அக்கறையில்லாத போக்கையும் பின்பற்றுகின்றனர். அதனால் பல ஆண்டுகளில் இன்னும் பலர் கொல்லப்படக் கூடும் எனத் தோன்றுகிறது,” என அவர் மேலும் கூறினார்.

2007 ஜனவரிக்கும் 2012 ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் போலீசார் 298 ‘கிரிமினல்களை’ சுட்டுக் கொன்றுள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் செவ்வாய்க் கிழமை நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த 298 பேரில் 134 பேர் இந்தோனிசியர்கள்.

ஹிஷாமுடின் சுங்கை சிப்புட் பிஎஸ்எம் உறுப்பினர் டாக்டர் ஜெயகுமார் தேவராஜ் தொடுத்த கேள்விக்கு ஏழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

பெரும்பாலான போலீஸ் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் 2008லும் 2009லும் நிகழ்ந்துள்ளதாக பிரி மலேசியா டுடே செய்தி இணையத் தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

TAGS: