பேரவை: அரசாங்க நிறுவனங்களை ஆய்வு செய்ய மலாய் கணக்காய்வு நிறுவனங்களை அமையுங்கள்

அரசாங்க நிறுவனங்களை ஆய்வு செய்வதற்கு மலாய் நிர்வாக கணக்காய்வு நிறுவனங்களை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றை மலாய் பொருளாதாரப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

கோலாலம்பூரில் நேற்று நிறைவடைந்த அதன் இரண்டு நாள் கூட்டத்தின் போது 500 பேராளர்கள் ஏற்றுக் கொண்ட 18 தீர்மானங்களில் அதுவும் அடங்கும்.

மலேசிய மலாய் வர்த்தக சங்கம் அந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அந்த 18 தீர்மானங்களும் விரைவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்பிக்கப்படும். நேற்று அந்தக் கூட்டம் முடிவுக்கு வந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.

100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் குறைவான மதிப்புள்ள திட்டங்களுக்கான குத்தகைகளை நேரடியாக மலாய்க்காரர்களுக்கு வழங்குமாறு நிதி அமைச்சை இன்னொரு தீர்மானம் கேட்டுக் கொள்கின்றது. அந்த குத்தகைகளை மலேசிய மலாய் வர்த்தக சங்கம் கண்காணிக்க வேண்டும்.

ஊழல் மீது கடுமையான நிலையைப் பின்பற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானத்தையும் மலாய் பொருளாதாரப் பேரவை நிறைவேற்றியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

‘மலாய் பொருளாதாரத்தில்’ காணப்படும் பிரச்னைகளுக்கான காரணங்களில் ஊழல், அதிகார அத்துமீறல் , நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவுவது ஆகியவையும் அடங்கும் என அந்தப் பேரவை கருதியது என அந்தச் செய்தி மேலும் குறிப்பிட்டது.

ஜிஎல்சி எனப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் ‘மலாய் திட்டத்தில்’ கவனம் செலுத்துவதையும் மலாய்  தொழில்முனைவர்களுடன் போட்டியிடாமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு இன்னொரு தீர்மானம் கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.

அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மலாய் தொழில் முனவைர்களுக்கு மூலதன அடிப்படையில் உதவ வேண்டும் என்றும் பேரவை வலியுறுத்தியது.

TAGS: