டாக்டர் மகாதீர்: மலாய் தோல்விக்கு பேராசையே காரணம்

மலாய்க்காரர்கள் தங்களது பொருளாதார, அரசியல் வலிமையை இழப்பதற்கு பேராசை ஒரு காரணம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

“அரசியல் அதிகாரம் இல்லாமல் புதிய பொருளாதாரக் கொள்கையை கொண்டு செலுத்த முடியாது. நாம் புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கிய போது நாம் (மலாய்க்காரர்கள்) வலுவாக இருந்தோம் . மதிக்கப்பட்டோம்.”

“இப்போது நாம் அங்கீகரிக்கப்படுவதில்லை. அது நமது தவறாகும். பேராசையும் பதவிகளை அடைவதற்கான போட்டா போட்டியும் நம்மை ஆட்கொண்டு விட்டன,” என அவர் சொன்னதாக சன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் மலாய் பொருளாதாரப் பேரவையில் பேசினார். மலாய்க்காரர்களிடம் ‘விரைவாக பணக்காரராகும்’ எண்ணம் ஏற்பட்டு விட்டதாக குறிப்பிட்ட போது மகாதீர் “வெளிப்படையாக’ பேசியதாக சன் நாளேடு குறிப்பிட்டது.

“நம்மையே நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் வாய்ப்புக்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டோமா ? நமது தவறுகளை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். நமது பேராசையை, விரைவாக பணக்காரராகும் வேட்கையை, வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வதில் உண்மையற்ற போக்கைப் பின்பற்றுவது ஆகியவற்றை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பதால் எல்லாம் நடக்கும் என எண்ணக்கூடாது,” என அவர் சொன்னதாகவும் அந்த ஏடு குறிப்பிட்டது.

மலாய்க்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புக்களை தவறாக பயன்படுத்தி மற்றவர்களிடம்  அவற்றை அடகு வைப்பதையும்  மகாதீர் சாடினார்.

“குத்தகைகளைப் பெறுங்கள். நாம் அவற்றை விற்று விடுகிறோம். அங்கீகரிக்கப்பட்ட அனுமதிகளைப் பெறுங்கள். நாம் அவற்றை விற்று விடுகிறோம்,” என அவர் சொன்னதாகவும் சன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமராகும் ஒரே ஆசையை மட்டும் கொண்டுள்ள பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளிப்பதின் மூலம் மலாய்க்காரர்கள் பிளவுபட்டிருப்பதால் அவர்கள் இப்போது பலவீனமாக இருக்கின்றனர். தங்கள் செல்வாக்கையும் இழந்துள்ளனர் என்றும் அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

TAGS: