பத்துமலை “கொண்டோ” : அனுமதி வழங்கியது பாரிசான் ஊராட்சி மன்றம், சேவியர்

2008 ஆம் ஆண்டில் புதிய ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு முன்பாக பத்துமலை குகைக்கு அருகில் 29 மாடி கொண்டோமினியம் கட்டுவதற்கான அனுமதியை செலயாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்) புதுப்பித்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் இன்று கூறினார்.

செலயாங் முனிசிபல் கவுன்சில் அந்த அனுமதியை மே 31இல் புதுப்பித்தது. ஆனால், பக்கத்தான் நியமித்த புதிய உறுப்பினர்கள் ஜூலை 5, 2008 இல்தான் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு அவர்களின் பணிகள் குறித்து விளக்கம் பெற்றனர்.

அந்த கொண்டோமினியம் கட்டுவதற்கான அனுமதியை ஆகஸ்ட் 2007 இல் முதலில் வழங்கியது பாரிசான் சிலாங்கூர் மாநில அரசாங்கம். ஆனால், அது காலாவதியாகி விட்டது.

“அங்கு டோலொமைட் கார்ப்ரேசன் பெர்ஹாட் கல்வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரிந்ததே. அதன் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி பெரும் ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது.

“பின்னர், பாரிசான் தலைவர்கள் அக்கல்வெட்டு தொழில் நடவடிக்கைகளை நிறுத்தினர். ஆனால், அந்த மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது”, என்று தொடர்பு கொண்டபோது சேவியர் கூறினார்.

அரசாங்கம் மேற்கொண்ட தொடக்ககால ஆய்வின்படி அக்கொண்டோமினியம் திட்டம் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின், சுற்றுச்சூழல் இலாகவைத் தவிர, ஒப்புதலைப் பெற்றிருந்தது.

“சுற்றுச்சூழல் இலாக அத்திட்டத்திற்கு 2007 ஆம் ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது”, என்று சேவியர் கூறினார். அவரின் இக்கூற்று மேம்பாட்டாளர்  தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார் என்று நேற்று எம்பிஎஸ் கூறிக்கொண்டதற்கு எதிர்மாறாக இருக்கிறது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான சேவியர் எம்பிஎஸ்சிடமிருந்து “முற்றிலும் முழுமையான அறிக்கை” கிடைக்கும் வரையில் பணியை நிறுத்துமாறு விடுக்கப்பட்டுள்ள உத்தரவை ஆட்சிக்குழு நீட்டித்துள்ளது என்று கூறினார்.

“மலேசிய மக்களுக்கு வரலாற்று மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த பத்துமலையின் நலன்களை நாங்கள் பாதுகாப்போம்”, என்று அவர் மேலும் கூறினார்.

அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் பத்துமலை கோயில் நிருவாகக்குழு தெரிவித்த ஆட்சேபத்தைத் தொடர்ந்து பணி நிறுத்த உத்தரவு செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டது. ஆனால், எம்பிஎஸ் அந்த மேம்பாட்டிற்கான அனுமதியை ரத்து செய்யும் வரையில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என்று  அக்குழு கூறியுள்ளது.

“அரசியல் நோக்கம் கொண்டது”

இந்த ஆட்சேபம் அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறிய சேவியர், கொண்டோமினியம் விற்பனை மையம் பத்துமலைக்கு அருகில் கடந்த நான்கு ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இக்காலகட்டத்தில் கோயில் நிருவாகக்குழு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவே இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.

“வழிபாட்டுத் தலங்கள்மீது இந்தியர்கள் கொண்டுள்ள உணர்வைத் தெரிந்து கொண்டு இக்கோயில் விவகாரத்தை பாரிசான் பயன்படுத்திக் கொள்கிறது”, என்று அவர் கூறினார்.

“இது ஒன்றும் புதிதல்ல. எம்பிஎஸ்சின் பதிவேட்டில் கோயில் நிருவாகக்குழுவிடமிருந்து ஆட்சேபம் தெரிவிக்கும் எந்த ஒரு கடிதமுமு பெற்றதற்கான குறிப்பும் கிடையாது.

“இந்நிலையில், பத்துமலை கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எதற்கும் ஊராட்சிமன்ற ஒப்புதலே கிடையாது. (தைப்பூசத்தன்று) பிரதமர் நஜிப் (அப்துல் ரசாக்கும் அவரது துணையாரும்) ரோஸ்மா மன்சூர் ஆகியோர் அமர்ந்திருந்த இடத்திற்குக்கூட தகுதி சான்றிதழ் கிடையாது”, என்றாரவர்.

29 மாடி கொண்டோமினியம் கட்டுமானம் இன்னும் தொடங்கவில்லை. அந்நிலம் இப்போது ஓரு வெறும் சம தள நிலம்தான் என்றும் அவர் கூறினார்.

மேலும், கோயிலுக்கு அருகில் ஒரு 29 மாடி கட்டடம் இருப்பதில் தவறு ஏதும் இல்லை என்று தம்மை மேற்கோள் காட்டி த ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியை அவர் மறுத்தார்.

“நான் அவ்வாறான அறிக்கை எதனையும் த ஸ்டாருக்கு அளிக்கவில்லை. அதனைத் திரும்பப் பெறுமாறு அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்”, சேவியர் மேலும் கூறினார்.