அல்டான்துயா கொலை மேல்முறையீடு விசாரணை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதானா?

உங்கள் கருத்து: “பிரதமர் பொதுத் தேர்தலுக்கு நாள் குறித்த பின்னரே மேல்முறையீடு மீதான விசாரணைக்கு நாள் குறிக்கப்படும் என்று நினைக்கிறேன்”.

 அல்டான்துயா கொலை வழக்கு கடைசி நேரத்தில் மீண்டும் ஒத்திவைப்பு

ஆர்மகெட்டன்: நீதிமன்றத்துக்கு மேல்முறையீட்டை விசாரிப்பதில் அக்கறை இல்லை என்றால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் அவ்விருவரையும் தூக்கிலிட வேண்டியதுதானே.

ஒருவேளை அல்டான்துயா ஷரீபுவின் தந்தையார் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பதைத் தாமதப்படுத்தத்தான் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுகிறதா? ஏதோ, நடக்குதய்யா.

வீரா:  பிரதமர் பொதுத் தேர்தலுக்கு நாள் குறித்த பின்னரே மேல்முறையீடு மீதான விசாரணைக்கு நாள் குறிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை தள்ளுபடி செய்யப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். கொலைக்கான நோக்கம் நிறுவப்படவில்லை என்பதால் நோக்கமற்ற கொலைக் குற்றச்சாட்டுத்தான் சுமத்தப்பட்டிருக்க வேண்டும்.

கினிகிட்: திரும்பத் திரும்பத் தாமதப்படுத்தப்படுகிறது என்றால் பொதுத் தேர்தல் விரைவில் வரப்போகிறது என்றுதான் பொருள். அவ்விரு போலீஸ்காரர்களின் முகங்களைப் பார்த்தவர் யாராவது உண்டா?

வீண் பேச்சு வேண்டாம்: முறையீட்டு நீதிமன்றம் விரும்பினால் விரைவாக விசாரணையை நடத்த முடியும். ‘கொல்லைப்புற வழியில் பேராக் எம்பி ஆன’ ஜம்ரி அப்துல் காடிர் வழக்கில் 24மணி நேரத்தில் விசாரணை நடத்தவில்லையா. ஆனால், அவப்பேறாக இவ்விரு கைதிகளும் ஜம்ரி அல்லவே.

டிம்: பொதுமக்கள் நலன் கருதியும் குற்றவாளிகளின் நலன் கருதியும் வழக்கு விசாரணை இயன்ற விரைவில் நடப்பதே நல்லது..இல்லையென்றால் நீதிமன்றத்தின் நோக்கத்தின்மீது மக்களுக்கு சந்தேகம் வந்துவிடும்.அதன் விளைவாக அவர்களின் கருத்து அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும்.

குற்றவாளிகள் இருவரும் எப்போதுமே முகம் மூடப்பட்டுத்தான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களின் படங்கள் இதுவரை வெளியிடப்பட்டதில்லை.

பெயரிலி: கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களின் முகங்கள் வெளியில் தெரியாதபடி இரகசியமாக பாதுகாக்கப்படுவது  இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

அவர்கள், என்ன 18 வயதுக்குக் குறைந்தவர்களா? இவர்களைப்போல் மற்ற கொலைக்குற்றவாளிகள் நடத்தப்படுவதில்லையே, ஏன்?

வெளிநாட்டுத் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து , குற்றவாளிகளின்  பல், மருத்துவ, டிஎன்ஏ-களை ஆராய்ந்து  அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

விக்டர் ஜான்: வழக்கு, விசாரணை, தள்ளிவைப்பு எல்லாமே நாடகம். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பெரும்பாலும் சிறைக்கு வெளியில்தான் சுதந்திரமாக உலவுகிறார்களாம், சொந்த அலுவல்களைக் கவனித்துக்கொள்கிறார்களாம்.

ஏதோ ஹோலிவூட் அல்லது போலிவூட் மெகா சீரியல் போல் இருக்கிறது.

அபு: குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், சிறைவாசத்தின்போதே சிறைக்கு வெளியில் செல்வதும் திரும்பி வருவதும் ஒன்றும் புதிதல்லவே. சில தசாப்தங்களுக்குமுன் நடந்த அப்துல்லா லிம் வழக்கு பலருக்கு நினைவிருக்கும். அப்போது டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தார்.

முகமூடி:  அவ்விருவரும் உண்மையிலேயே‘அவர்கள்தானா’? உண்மைக் குற்றவாளிகள் ஹவாயில் ‘ஹாயாக’ சுகபோகத்தில் மூழ்கியிருக்கப் போகிறார்கள். வழக்கு தொடங்கிய நாள் தொட்டு நாம்தான் அவர்களின் முகங்களைப் பார்த்ததில்லையே.

சாதாரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு, சட்டைகளைக் கொண்டு அல்லது செய்தித்தாள்களைக் கொண்டு முகத்தை மறைத்துக்கொள்வார்கள். ஆனால் , இவர்கள் மட்டும் முகத்தை நன்றாக மூடி மூடிமறைத்துக்கொண்டுதான் வருகிறார்கள். அவர்களென்ன சிறப்புரிமை கொடுக்கப்பட்டிருக்கிறதா? இதுதான் நீதியா?.
 

 

TAGS: