பாஸ்போட் இல்லை; வீசா இல்லை! விமானத்தில் பயணம் செய்த பாம்பு

‘பாம்பு என்றால் படையே நடுங்கும்’ என்பது பழமொழி. இங்கொரு பாம்பு கடவுச்சீட்டு, வீசா எதுவுமே இல்லாமல் விமானத்தில் ஏறி மெக்சிகோவிலிருந்து பிரிட்டன் வந்து சேர்ந்திருக்கிறது.

மெக்சிகோவின் கன்குன் விமான நிலையத்திலிருந்து ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரம் வரை கிட்டத்தட்ட 5 ஆயிரம் மைல்கள் தூரம் இந்த பாம்பு கடந்து வந்திருக்கிறது.

பயணிகள் இருக்கைகளின் கீழே அமர்ந்தபடி, யாருக்கும் தெரியாமல் அமைதியாக வந்துசேர்ந்த 18 அங்குலம் நீளமான இந்தப் பாம்பை விமானப் பணியாளர் ஒருவர் தான் இறுதியில் கண்டுள்ளார்.

உடனடியாக, ஸ்கொட்லாந்தின் வன உயிர் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தினர் வந்து அதனை மீட்டெடுத்து கொண்டுசென்றார்கள்.

இது விஷப்பாம்பு இல்லாவிட்டாலும், அது கடித்தால் ஒரு பதம் பார்த்துவிடும் என்று வனஉயிர் பாதுகாப்பு பணியாளர்கள் கூறினர்.

பாம்பின் வேலையை பார்த்துவிட்டு விமானநிலையப் பணியாளர்கள் அதற்கு ஃபுர்டிவோ என்று பெயரிட்டுள்ளார்கள்.

அப்படியென்றால், செல்லமாக ஸ்பானிய மொழியில் ‘திருட்டுப்பயல்’ என்று அர்த்தமாம்!