உள்நாட்டு வணிகர்கள் அனுமதிகளை அந்நியர்களுக்கு ‘வாடகைக்கு’ விடக் கூடாது

கோலாலம்பூர் மாநகராட்சியில் உள்நாட்டு வணிகர்களிடமிருந்து வாடகைக்கு பெற்ற அனுமதிகளை அந்நியர்கள் பயன்படுத்தும் காலம் விரைவில் முடிவுக்கு வரும்.

சௌக்கிட்-டில் உள்ள ஜாலான் ராஜா போட் சந்தைக் கூடம் உட்பட பல இடங்களில் இயங்கும் அத்தகைய அந்நியர்களைப் பிடிப்பதற்கு போலீஸ், குடிநுழைவுத் துறை ஆகியவற்றைன் ஒத்துழைப்புடன் மாநகராட்சி மன்றம் சோதனைகளில் ஈடுபடும்.

உள் நாட்டு மக்களுக்கு மட்டுமே அனுமதிகள் வழங்கப்படுவதால் பிரபலமான பகுதிகளில் வர்த்தகம் செய்வதற்கு உள்ளூர் வணிகர்களிடமிருந்து மிக அதிகமான விலையில் அந்நியர்கள் ‘வாடகைக்கு’ எடுத்துள்ளதாக மாகராட்சி மன்றம் சந்தேகிக்கிறது.

மேயர் அகமட் பெசால் தாலிப் அந்த நிலைமை குறித்து மகிழ்ச்சி அடையவில்லை.

தங்களுடைய அனுமதிகளை அந்நியர்களுக்கு ‘வாடகைக்கு’ விட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்படும் உள்நாட்டு வணிகர்களுடைய அனுமதிகள் ரத்துச் செய்யப்பட்டு கடைகள் பறிமுதல் செய்யப்படும் என அவர் எச்சரித்தார்.

“வர்த்தகத்தை தாங்களே செய்யாமல் குடியேற்றத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாடைகைக்கு சில உள்  நாட்டு வணிகர்கள் விடுவது அந்நிய அங்காடிக்காரர்கள் எண்ணிக்கை பெருகுவதற்கு முக்கியக் காரணம்.”

“எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அந்நியர்கள் அதனைக் கொடுப்பர் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த அனுமதிகளைப் பெற்ற உள் நாட்டு வணிகர்களுடைய பொறுப்பற்ற போக்கையும் அது காட்டுகின்றது,” என அவர் சொன்னார்.

அவர் இன்று மஸ்ஜித் நெகாராவில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

TAGS: