தீய பிஎன் தந்திரங்களுக்கு தயாராக இருங்கள் என பக்காத்தான் பேராளர்களுக்கு எச்சரிக்கை

வரும் பொதுத் தேர்தலுக்கான பிஎன் ஆயத்தங்களில் பினாங்கு மாநில அரசாங்கத்தை கீழறுப்புச் செய்வதற்கான “தீய தந்திரங்களும்’ அடங்கும் என அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் எச்சரித்துள்ளார்.

அந்த தந்திரங்கள் என்ன என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் பிஎன் அவற்றை பயன்படுத்தும் போது அவற்றை எதிர்கொள்ள பக்காத்தான் தயாராக இருப்பதாகச் சொன்னார்.

அந்தத் தந்திரங்களைத் தான் விவரமாகக் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த லிம் “நாம் அதனைச் செய்தால் அவர்கள் புதிய தந்திரங்களை உருவாக்குவர்,” என்றார்.

இவ்வாண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு எப்ரலுக்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளங்கள் அடிப்படையில் பிஎன் -னுக்கு இணையாக இல்லாவிட்டாலும் அதன் தேர்தல் எந்திரத்துக்கு சமமாக இயங்குவதற்கு பக்காத்தான் முயற்சி செய்ய வேண்டும் என்றார் லிம்.

“பினாங்கில் மலாய்க்காரர் அல்லாதாரிடையே நாம் கிட்டத்தட்ட 70 விழுக்காடு தயார் நிலையில் உள்ளோம். மலாய்க்காரர்களிடையே பிஎன் மிகவும் ஆயத்தமாக உள்ளது எங்களுக்குத் தெரியும்.”

“வளங்களைப் பொறுத்த வரையில் அம்னோ அதிக அளவில் ஆயத்தமாக உள்ளது. ஏனெனில் அதனிடம் எறிவதற்கு நிறையப் பணம் உள்ளது. சபாவில் அதற்கு 40 மில்லியன் ரிங்கிட் கிடைத்துள்ளது. பினாங்கிலும் அதற்கு அது போன்ற தொகை கிடைக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன்,” என டிஏபி தலைமைச் செயலாளருமான அவர் சொன்னார்.

‘உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்’

இதனிடையே முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் பக்காத்தான் பேராளர்கள் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாவதற்கு ஒரு வழியாக ‘மக்களுக்கு அணுக்கமாக இருக்க வேண்டும்’ என லிம் அறிவுரை கூறினார்.

மக்களுடைய தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் சொல்லுங்கள், புகார்களைக் கவனியுங்கள், அடிக்கடி  வீடு  வீடாகச் செல்லுங்கள் என அவர் பரிந்துரைத்தார்.

“சிலர் அதனைச் செய்கின்றனர். சிலர் அதனைச் செய்யவில்லை. நாம் அது குறித்து வெளிப்படையாகவும் உண்மை நிலைக்கு ஏற்பவும் பேச வேண்டும்.”

சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்திய லிம் அவர்கள் ‘சொந்தமாக தங்களைக் கண்காணித்து” கொள்ள வேண்டும் என்றார்.

“அனைத்து மாநிலத் திட்டங்களும் முழுமையாக வெற்றிகரமாக அமலாக்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.”

“நாம் அவர்களுடைய தாக்குதல்களை சமாளிக்க உறுதியுடன் செயல்பட வேண்டும். தீய தந்திரங்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதோடு நம்மையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றும்   லிம் வலியுறுத்தினார்.