தீபாவளி நெருங்கும் வேளையில் வணிகர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு கூடினர்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கின்றன. அந்த வேளையில் தங்களது பாரம்பரிய விழாக் காலச் சந்தை மீண்டும் பழைய இடத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி 40 பிரிக்பீல்ட்ஸ் சிறு வணிகர்கள் இறுதி முயற்சியாக தங்கள் போராட்டத்தை இன்று புத்ராஜெயாவுக்கு கொண்டு சென்றனர்.

பிரதமர் துறைக்கு வெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் ஒன்று கூடிய அவர்கள் அந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்ளும் பதாதைகளை வைத்திருந்தனர். சுலோகங்களையும் முழங்கினார்கள்.

கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சுடன் கடந்த இரு வாரங்களாக நடத்தப்படும் பேச்சுக்கள் எந்தப் பலனையும் தராததால் அந்த சிறு வணிகர்கள் புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

தங்களுடைய தீபாவளி சந்தை ஜாலான் துன் சம்பந்தனிலிருந்து ஜாலான் பெர்ஹாலாவுக்கு மாற்றப்பட்டது மீது அந்த வணிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அந்த இட மாற்றம் தங்கள் வியாபாரத்தைப் பெரிதும் பாதித்து விட்டதாக அவர்கள் சொல்கின்றனர்.

“அந்தச் சந்தை முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. புதிய பகுதியில் வர்த்தகம் மிக மோசமாக உள்ளது.”

“அவர்கள் எங்களை பழைய இடத்திற்குத் திரும்ப அனுமதிக்கா விட்டால் நான் என்னுடைய முதலீட்டைக் கூட எடுக்க முடியாது,” என ஆடை விற்பனையாளரான ஜோசப் நாதன் வெறுப்புடன் கூறினார்.