லிம் குவான் எங்: ஆடம்பர வாழ்க்கை முறைகளைப் பின்பற்றும் தலைவர்களை பிஎன் கை விட வேண்டும்

ஊழலைத் தடுப்பதற்கு டிஏபி ஆறு நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்கிறது என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

அந்த எல்லாத் துறைகளிலும் பிஎன் தோல்வி கண்டுள்ளதாக அவர் இன்று மலாக்கா மாநில டிஏபி மாநாட்டில் கூறினார்.

சொத்துக்களைப் பகிரங்கமாக அறிவிப்பதை நடைமுறையாக்குவது முதலாவது நடவடிக்கை என அவர் தெரிவித்தார்.

“அது பினாங்கில் செய்யப்பட்டுள்ளது. அங்கு முதலமைச்சரும் அனைத்து ஆட்சி மன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களைப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதற்கு அனைத்துலக கணக்காய்வு நிறுவனம் ஒன்று சான்றிதழ் வழங்கியுள்ளது,” என பாகான் எம்பி-யுமான லிம் சொன்னார்.

மிக ஆடம்பரமான வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ள, ஆடம்பர வீடுகளையும் கார்களையும் சொந்தமாக வைத்துள்ள, அந்நிய நாடுகளில் உள்ள வங்கிகளில் சொந்தக் கணக்கில் பெரும் தொகையை வைத்துள்ள பிஎன் தலைவர்களை அகற்றுவது இரண்டாவது நடவடிக்கை ஆகும்.

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டுக்கு அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் நிராகரித்துள்ளது குறித்து மலேசியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக லிம் மேலும் கூறினார்.

தாயிப்பின் புதல்வர் இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமது கிரடிட் கார்டுகளில் ஒன்றின் மீது மட்டும் 782,520.55 ரிங்கிட் செலவு செய்துள்ளதாக தாயிப்பின் முன்னாள் மருமகளான மாஹ்முட் ஷானாஸ் அப்துல் மஜித் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளார்.

உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் உள்ள 111 வங்கிக் கணக்குகளில் 700 மில்லியன் ரிங்கிட் சேமிப்புக்களுடன் தமது கணவருடைய மொத்த சொத்து மதிப்பு 1 பில்லியன் ரிங்கிட் என ஷாரியா நீதிமன்றத்தில் சமர்பித்துள்ள மண விலக்கு தீர்வில் ஷானாஸ் 400 மில்லியன் ரிங்கிட் கோரியுள்ளார்.

இன்னொரு விஷயம் மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாமின் ஆடம்பர வாழ்க்கை முறையாகும் என லிம் சுட்டிக் காட்டினார்.  அண்மையில் அவர் நடத்திய ஒரு கொண்டாட்டத்திற்கு 130,000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அது மலேசியாவில் பெரிய சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆடம்பரமான திருமண நிகழ்வுக்கு யார் ஆதரவு அளித்தார்கள் என்பதை அலி ரூஸ்தாம் இன்று வரை விளக்கவில்லை.

அரசாங்க வர்த்தகத்தில் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்படுவதற்கு தடை விதிப்பது மூன்றாவது நடவடிக்கை என அவர் மேலும் சொன்னார்.

“250 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட “மாடுகள்-ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் ஊழல்” மீண்டும் நிகழாதிருப்பதற்கு அது அவசியமாகும்.”

நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படுவதற்கு வழி வகுக்கும் ஊழல் விவகாரங்களை அம்பலத்துகின்றவர்களை  பாதுகாக்க வேண்டுமே தவிர அவர்கள் மீது வழக்குப் போடப்படக் கூடாது என்பது நான்காவது நடவடிக்கை ஆகும்.

சபா அம்னோவுக்கான 40 மில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை போன்ற அரசியல் நன்கொடைகள் மீது பிஎன் தூயமையாக இருக்க வேண்டும் என்பது ஐந்தாவது நடவடிக்கை ஆகும்.

சபா அம்னோவுக்கான அந்த பெரிய நன்கொடையை பொருத்தமானது என பிரதமர் கருதுவது குறித்து மலேசியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போட்டியான திறந்த டெண்டர் முறை அமலாக்கப்பட வேண்டும். திறந்த போட்டி டெண்டர் முறை இல்லை என்றால் பொதுத் திட்டங்கள் நேரடியாகப் பேச்சு நடத்தப்பட்டு சேவகர்களுக்கு கொடுக்கப்படுவதால் அரசாங்க வருமானம் இழக்கப்படுவதற்கு வழி வகுத்து விடுகின்றது. எடுத்துக்காட்டுக்கு சுங்கை பெசி ஆகாயப் படைத் தள நிலம் மலிவாக விற்கப்பட்டதை சொல்லலாம்.

மிக குறைவாகவே பயன்படுத்தப்படும் மலாக்கா விமான நிலையத்துக்கு 240 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ளதை லிம் சுட்டிக் காட்டினார்.

சபா சரவாக்கில் உள்ள 57  KR1M கடைகளுக்கு 386 மில்லியன் ரிங்கிட் அதாவது கடை ஒன்றுக்கு 6.7 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்படுவது நியாயமானதா என அவர் தொடர்ந்து வினவினார்.

 

TAGS: