குலா: பத்துமலை கொண்டோ சர்ச்சையில் பிஎன் பாச்சா பலிக்கவில்லை

“செய்வதையெல்லாம் செய்துவிட்டு  பழியைத் தூக்கி பக்காத்தான் ரக்யாட்மீது போடும்” பிஎன்னின் பழக்கத்துக்கு பத்துமலை கொண்டோ சர்ச்சை இன்னுமொரு எடுத்துக்காட்டாகும் என்கிறார்  டிஏபி உதவித் தலைவர் எம்.குலசேகரன்.

பர்மா சென்றுள்ள அந்த ஈப்போ பாராட் எம்பி, மின்னஞ்சல்வழி மலேசியாகினியைத் தொடர்புகொண்டு, “இச்சம்பவம் 1990-இல் டிஏபி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தால் அப்போதைய  சிலாங்கூர் அரசு ஆலயத்துக்கு அருகில் நடந்துவந்த கல்லுடைப்பு வேலைகளை முற்றாக நிறுத்திக்கொண்டதை நினைவுபடுத்துகிறது”, என்று கூறினார்.

1990-க்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பத்துமலை கோயில் நிர்வாகம் ஆலயத்துக்கு அருகில் நடந்துவந்த கல்லுடைப்பு வேலைகளால் பத்துமலையின் சூழியல் பாதிக்கப்படும் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது..

“ஆனால், அவ்வெதிர்ப்பு செவிடன் காதில் ஊதிய சங்காகப் போனது.. அதன்பின்னர் (டிஏபி தலைவர்கள்) லிம் கிட் சியாங்கும் ஏ.சிவநேசனும் ஆர்ப்பாட்டத்தை ஏற்று நடத்தியதும்தான் சிலாங்கூர் அரசு கல்லுடைப்பு வேலைகளை நிறுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளானது.”, என்பதை அவர் நினைவுகூர்ந்தார்.

1990-இல் ஆலயத்துக்கு அபாயம் ஏற்படலாம் என்ற உச்சக்கட்ட நிலைவரை காத்திருந்துவிட்டு அதன் பின்னரே பிஎன் நடவடிக்கை எடுத்தது.அப்போதும்கூட கல்லுடைப்புக்கு அது பொறுப்பு ஏற்கவில்லை. பொறுப்பை மற்றவர்கள்மீது போட்டது.

“ஆனால், அந்தத் தந்திரம் அப்போதும் பலிக்கவில்லை, இப்போதும் பலிக்கவில்லை”, என்று குலசேகரன் கூறினார்.

மற்றவர்மீது பழிபோடுதல்

பத்துமலை கொண்டோ சர்ச்சையில் ஆக கடைசியாக, ஊராட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள சிலாங்கூர் ஆட்சிக்குழு  உறுப்பினர் ரோனி லியு, 29 மாடி கொண்டோ கட்டுவதற்கு பிஎன் 2007-இலியே அனுமதி அளித்திருப்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்களைக் காண்பித்துள்ளார்.
பிஎன் வழங்கியது தற்காலிக அனுமதியே என்று வெளியுறவு துணை அமைச்சரும்  செலாயாங் முனிசிபல் மன்ற முன்னாள் உறுப்பினருமான ஏ.கோகிலன் பிள்ளை கூறியது உண்மையல்ல என்பதைக் காண்பிக்கும் முயற்சியாக லியு அவ்வாறு செய்துள்ளார்.

2007-இல் வழங்கப்பட்டது கட்டிடம் கட்டும் திட்டத்துக்கான அனுமதிதானே தவிர ஆலயத்துக்கு அருகில் பலமாடிக் கட்டிடம் கட்டப்படும் என்ற விவரமெல்லாம் அதில் இல்லை என்று கோகிலன் கூறியிருந்தார். அவர் சொன்னதில் உண்மையில்லை என்று லியு போட்டுடைத்து விட்டார்.

“பொறுப்பைத் தூக்கி பக்காத்தான்மீது போடப் பார்க்கிறார்கள்”, என்று கூறிய குலசேகரன், “அம்முயற்சி பலிக்கவில்லை. ஆர்ப்பாட்டத்துக்குக் கணிசமான கூட்டத்தைக்கூட அவர்களால் திரட்ட முடியவில்லை”, என்றார்.