தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு காவல் இளைஞர் படை உருவாக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த படையினர் இரவு ரோந்து மற்றும்  போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்ட  அறிக்கையில்;

“தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர்  படை என்ற படைப்பிரிவு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிதியாண்டில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

18 வயதிலிருந்து 30 வயது வரையுள்ள 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு  தகுதியானவர்கள். இவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, போக்குவரத்து  ஒழுங்குபடுத்துதல், கூட்டநெரிசலை கட்டுப்படுத்துதல், இரவு ரோந்து, ஓட்டுநர் பணி,  வாரண்ட் அளித்தல் உள்ளிட்ட பணிகள் அளிக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சுமார் 50 ஆயிரம்  பேர் வரை அடுத்த சில ஆண்டுகளில் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு  போலீஸ் தேர்வில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும்.

அவ்வாறு போலீசில் தேர்வு செய்யப்படாதவர்கள் தங்களது 40-வது வயதில், இதர அரசு  பணிகளுக்கு மாற்றம் செய்யப்படுவர். இவர்களுக்கு மதிப்பு ஊதியமாக மாதம் ரூ.7000  வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: