அமெரிக்காவை அலறவைத்த சான்டி புயல்; அவசரநிலை அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவை தாக்க உள்ள சான்டி புயலை எதிர்கொள்வதற்காக பல மாநிலங்களில் அவசர நிலை பிரகடனங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவை தாக்கப் போகும் மிகப் பெரிய புயலாக இது இருக்கும் என்பதால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவையொட்டிய கரீபியன் கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்பு சான்டி புயல் உருவானது. இது கியூபா மற்றும் ஜமைக்காவில் பெருமழையைக் கொட்டியபடி நேற்று முதல் அமெரிக்காவை மிரளவைத்து வருகிறது. சூப்பர் புயல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சான்டியை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க் பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. சுமார் 4 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ரயில் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

நியூயார்க் நகரம் இருள் போர்த்தியதாக காணப்படுகிறது. இந்த சான்டி புயலால் சுமார் 31 செமீ அளவுக்கு மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருக்கிறது. கடலோரப் பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.