வருங்காலத் தலைமுறையின் நன்மைக்காகக் கொடுக்கும் சிறிய விலை

உங்கள் கருத்து: “நானும் வாக்களிக்க மலேசியாவுக்குத் திரும்பி வருவேன். வெளிநாட்டில் வசிக்கும் மற்ற மலேசியர்களும் அப்படியே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்”.

எதற்காக நாடு திரும்பி வர வேண்டும்

பெயரிலி#8211967: சொந்த நாட்டில் நிலவும் நியாயமற்ற சூழலால் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் நல்ல வாழ்க்கை தேடிக்கொண்ட அனைவருக்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டி வீர வணக்கம் செலுத்துகிறேன்.

தயவு செய்து நீங்கள் அனைவரும் இப்போதுள்ள ஆட்சியை அகற்றி நம் இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தர நாடு திரும்பி வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு வகையில் நான் பேறு பெற்றவன். உள்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. படிப்பு முடிந்து அரசாங்க வேலையும் கிடைத்தது. ஆனால், என்இபி அடிப்படையில்  காட்டப்பட்ட பாகுபாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அரசாங்க வேலையிலிருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எக்ஸ் எக்ஸ்: நாம் மலேசியா திரும்பிச் சென்று வாக்களிக்கப் போகிறேன். வெளிநாடுகளில் வசிக்கும் மற்ற மலேசியர்களும் அவ்விதமே செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அது வருங்கால தலைமுறையின் நன்மைக்காக நாம் கொடுக்கும் ஒரு சிறு விலை. நாம் எதிர்நோக்கியதை அவர்கள் எதிர்நோக்கக் கூடாது.

பூன்பூ: வில்லியம் உங்களுக்கு மட்டுமல்ல.. நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான மலேசியர்களுக்கும் அந்த அனுபவம் உண்டு-என்னையும் சேர்த்து.

நான் நன்றாக படிப்பவன். ஆனால், என் எம்சிஇ, எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் எனக்கு அதிர்ச்சி தந்தன. அமெரிக்கா சென்று படிக்க முடிவு செய்தேன். மங்கு கழுவிக் கொண்டும் மேசை துடைத்துக்கொண்டும் படித்தேன்.

இப்போது பிஎச்டி பட்டம் பெற்று கெனடாவில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்.

வாக்களிக்க நான் மலேசியா திரும்பி வருவேன்.

ஊழல்-எதிர்ப்பு: நானும் உங்கள் கட்சிதான். 35 ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர் சென்றேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். ஊழல் மிக்க, இனவாதம் பேசும் இந்த அம்னோ அரசை ஒழிக்க வேண்டும்.அதற்காக திரும்பி வந்து வாக்களிப்பேன்.
டிங் ஜெங்: நானும் சிங்கப்பூரில் வேலை பார்க்கிறேன். என் சகாக்களில் சிலர் மலேசியர்கள். நாங்கள் அனைவருமே மலேசியா திரும்பி வாக்களிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

நம் அன்புக்குரிய நாட்டைக் காக்க குறைந்தபட்சம் இதையாவது செய்ய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறோம்.

டான் சி: நானும் மலேசியன்தான். என் மனைவியும் பிள்ளைகளும் சிங்கப்பூரர்கள். ஆனால், நான் என் மலேசியக் குடியுரிமையைத் துறக்கவில்லை.

பலரும் ஏன் என்று கேட்டதுண்டு. ஏனென்றால், என் மனசெல்லாம் மலேசியாதான் நிறைந்துள்ளது. 

மலேசியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அம்னோ கொள்கைகள்தாம் பிடிப்பதில்லை.

உங்களுக்குத் தெரியுமா? எந்தப் பொதுத் தேர்தலிலும் நான் வாக்களிக்காமல் இருந்ததில்லை. எப்போதும் வாக்களிப்பதற்காகவே திரும்பி வருவேன். 

பெர்ட் டான்: “தனித் தனித் துளிகள் ஒன்றுசேர்ந்து சமுத்திரமாகிறது”, என்றார் ஓர் அறிஞர். அப்படித்தான் நாடு திரும்பி வாக்களிக்க வேண்டும் என்பதில் உங்களுக்குள்ள நாட்டம் மற்றவர்களுக்கு ஓர் உந்துசக்தியாக விளங்கும்.