நோ ஒமார்: நான் என்ன சொன்னாலும் டிஏபி என்னைப் பின் தொடரும்

நெல் விதைகள் விநியோகத்தைச் சூழ்ந்துள்ள சர்ச்சை மீது சுருக்கமான விளக்கத்தையே நேற்று விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் வழங்கினார். ஏனெனில் தாம் எவ்வளவு பெரிய விளக்கத்தை அளித்தாலும் டிஏபி ‘தம்மைப் பின் தொடருவது திண்ணம்’ என அவர் சொன்னார்.

“நான் அது குறித்து விரிவாகப் பேசியுள்ளேன். அது எவ்வளவு விரிவாக இருந்தாலும் செக்கிஞ்சானில் டிஏபி எனக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யும்,” என அவர் கூறினார்.

‘இன்று காலை அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதில் பலர் கலந்து கொள்ளவில்லை. 35 பேர் மட்டுமே என நான் எண்ணுகிறேன். அவர்கள் நான் பதவி விலக வேண்டும் எனச் சொன்னது தான் முக்கியமானது.”

“நான் என் பதில் சொல்லாலும் டிஏபி அதனைத் திரிக்கும். நான் போதுமான விளக்கம் தந்து விட்டதாக நான் கருதுகிறேன்,” என நோ ஒமார் நேற்று நாடாளுமன்றத்தில் தமது அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தை அவர் குழு நிலையில் நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

அதற்கு முன்னதாக   MR 220CL1, MR 220CL2 என அழைக்கப்படும் புதிய மேம்படுத்தப்பட்ட நெல் விதைகள் விநியோகத்தில் ஏன் ஒரே நிறுவனம் அதாவது Seri Merbok Sdn Bhd மட்டும் ஏன் ஏகபோக ஆதிக்கம் செலுத்துகின்றது என பாஸ் பொக்கோக் செனா உறுப்பினர் மாஹ்புஸ் ஒமார் நோ ஒமாரிடம் வினவியிருந்தார்.

“அந்த ஸ்ரீ மெர்போக் நிறுவனம் நெல் விதைகளுடன் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் சேர்த்து விற்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுகின்றது,” என மாஹ்புஸ் சொன்னார்.

“விவசாயிகள் விதைகளை மட்டும் வாங்கி பூச்சிக் கொல்லி மருந்தை வேறு இடத்தில் வாங்கினால் அது  மலிவாக இருக்கும்.”

மார்டி எனப்படும் மலேசிய விவசாய ஆய்வு மேம்பாட்டுக் கழகமும்  BASF (M) Sdn Bhd கடந்த ஏழு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக அந்தப் புதிய இரண்டு நெல் வகைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

TAGS: