பெட்ரோனாஸ் பெர்த்தாம் பகுதியில் புதிய எண்ணெய் வளங்களைக் கண்டு பிடித்துள்ளது

பெர்த்தாம் எண்ணெய் வயல் பகுதியில் Petronas Carigali Sdn Bhd-ம் Lundin Oil நிறுவனமும் உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தின் கீழ் புதிய எண்ணெய் வளங்களைக் கண்டு பிடித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார்.

தீவகற்ப மலேசியாவில் பாகாங் மாநிலத்துக்கு அப்பால் 160 கிலோ மீட்டர் தொலைவில் அந்த எண்ணெய் வளங்கள் இருப்பதாக அவர் சொன்னார்.

அந்த எண்ணெய் வளங்களைக் கண்டு பிடித்த PM 307 PSC-யில் லுண்டின் மலேசியா 75 விழுக்காடு பங்குகளையும் பெட்ரோனாஸ் எஞ்சியுள்ள பங்குகளையும் வைத்துள்ளன.

“அந்தக் கண்டு பிடிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் பென்யூ கடற்படுகையில் நாம் வர்த்தக ரீதியில் எடுக்கப்படக் கூடிய எண்ணெய் வளத்தை நாம் இது வரையில் கண்டு பிடித்தது இல்லை.”

“வர்த்தக, தொழில் நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் அங்கு 2014ம் ஆண்டு மூன்றாவது கால் பகுதியில் அங்கு கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு 17,500 பீப்பாய் முதல் 20,000 பீப்பாய் வரை எண்ணெய் எடுக்க முடியும்.”

நஜிப் இன்று புத்ராஜெயாவில் உயிரியல் தொழில்நுட்ப அமலாக்க மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.

அந்தப் புதிய கண்டு பிடிப்பைத் தொடர்ந்து பெர்த்தாம் எண்ணெய் வயல் பகுதியில் மொத்தம் 64 மில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சருமான பிரதமர் சொன்னார்.

அங்கு உற்பத்தி தொடங்கியதும் பாகாங் மாநிலத்துக்கு சிறப்புத் தொகையாக ஆண்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“அந்த எண்ணெய் வயல் கூட்டரசு அரசாங்கத்தின் பரிபாலனத்தில் உள்ள கடற்படுகையில் அமைந்துள்ளது.”

“எண்ணெய் வளப்பத்தைப் பகிர்ந்து கொள்வது நமது கொள்கை ஆகும். பாகாங்கிற்கு ஐந்து விழுக்காடு தொகை ரொக்கமாகக் கொடுக்கப்படும்.”

பாகாங் மாநிலத்தில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என பெட்ரோனாஸ் உதவித் தலைவர் ரம்லான் ஏ மாலிக் கூறினார்.

பெர்னாமா