ராபிஸி: உண்மையைச் சொல்லுங்கள் இல்லையென்றால் அம்பலமாகும்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள வெட்டு மரச் சலுகைகள் மீது உண்மை நிலவரங்களை அதன் மந்திரி புசார் முகமட் ஹசான் வெளியிட வேண்டும். இல்லை என்றால் அந்த மாநிலத்தில் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதிக: வெகு வேகமாக குறைந்து வருவதற்குப் பொறுப்பான அம்னோ தொடர்புடைய நிறுவனங்கள் அம்பலப்படுத்தப்படும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அந்த வெட்டு மரச் சலுகைகள் யாருக்குக் கொடுக்கப்பட்டன என்பதையும் அரசாங்கத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதையும் அந்த நிலங்கள் இப்போது யாருக்கு சொந்தம் என்பதையும் மக்கள்  அறிய வேண்டும்,” என அவர் இன்று மக்கள் நாடாளுமன்றத்த்தில் நிருபர்களிடம் கூறினார்.

பாடாங் செலத்தான் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதியில் அம்னோ தொடர்புடைய நிறுவனங்கள் வெட்டு மர நடவடிக்கைகளில் சட்ட விரோதமாக ஈடுபடுவதற்கு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் அனுமதித்துள்ளது என தாம் கூறியதற்கு முகமட் ஹசான் அளித்துள்ள பதில் மன நிறைவைத் தரவில்லை என ராபிஸி மேலும் சொன்னார்.

வெட்டுமர நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு ஈடாக 2,400 ஹெக்டர் காட்டு ஒதுக்கீட்டு நிலம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக முகமட் கூறிய வேளையில் அந்த நடவடிக்கை சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் முற்றாக புறக்கணித்து விட்டதாக ராபிஸி சொன்னார்.

“பாடாங் செலத்தான் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதியின் நிரந்தர காட்டு ஒதுக்கீட்டு தகுதியை ரத்துச் செய்ய மாநில ஆட்சி மன்றம் முடிவு செய்தது குறித்து முகமட் விளக்கத் தவறி விட்டார். அது 1976ம் ஆண்டுக்கான நகர, நாட்டுப்புற திட்ட சட்டத்தின் கீழ் சட்ட விரோதமாகும்,” என அவர் தெரிவித்தார்.

ஜெராம் பாடாங் செலத்தான் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதி சுற்றுச்சூழல் ரீதியில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பகுதி- முதல் நிலை-  எனக் குறிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த மேம்பாடும் அனுமதிக்கப்படக் கூடாது என்பதே அதன் அர்த்தமாகும்.

TAGS: