தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் நல்ல தோற்றத்தைப் பெறுவதற்காக பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் creative கணக்கியல் முறையைப் பயன்படுத்தியுள்ளதாக பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றம் இன்று குற்றம் சாட்டியுள்ளது.
அவ்வாறு குற்றம் சாட்டிய பிஎன் பின்னிருக்கை உறுப்பினர்கள் மன்றத் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான், மாநிலங்களின் டிரஸ்ட் கணக்குகளிலிருந்து தங்களது ஒருங்கிணைக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றி விட்டு வருமானமாக அந்தப் பணத்தைக் காட்டுவதின் வழி அது செய்யப்பட்டுள்ளது என்றார்.
“ஒவ்வொரு மாநில அரசாங்கத்துக்கும் டிரஸ்ட் கணக்கு என ஒன்று உள்ளது. சிறப்பு நோக்கங்களுக்காக தொடக்கத்திலிருந்தே அங்கு பணம் ஒதுக்கப்படுகின்றது. அந்தப் பணம் மாநில அல்லது கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து வருகிறது.”
“எடுத்துக்காட்டுக்கு ஒரு திட்டத்துக்கு 100 மில்லியன் ரிங்கிட் தேவைப்படும் என்றால் அந்தத் தொகை டிரஸ்ட் கணக்கில் வைக்கப்படுகின்றது. கணக்காய்வுக்கு முன்னதாக அவர்கள் பாக்கித் தொகையை- 60 மில்லியன் ரிங்கிட் என வைத்துக் கொள்வோம்- டிரஸ்ட் கணக்கிலிருந்து மாநிலத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கிற்கு மாற்றி விடுகின்றனர்.”
“அதனை creative கணக்கியல் முறை என அழைக்கின்றனர்,” என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

























