விஞ்ஞானிகளை நடுங்கவைக்கும் நிலநடுக்கத் தீர்ப்பு

இத்தாலியில் 2009-ஆம் ஆண்டு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்திய லாகுய்லா நிலநடுக்கத்தை துல்லியமாக கணித்து பொதுமக்களை சரியாக எச்சரிக்கத்தவறிய குற்றச்சாட்டின் கீழ் ஆறு விஞ்ஞானிகளுக்கும் ஒரு பேரிடர் மையத்தடுப்பு மையத்தின் உயர் அதிகாரிக்கும் ஆறுஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் சுமார் எட்டுமில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலியை கடுமையாக பாதித்த லாகொய்லா நிலநடுக்கத்தில் 309 பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்.

இந்த குறிப்பிட்ட நிலநடுக்கம் ஏற்படும் என்று இத்தாலிய பேரிடர் தடுப்பு மைய விஞ்ஞானிகள் சரியாக கணித்திருந்தாலும், இதன் தீவிரத்தன்மை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புக்களின் சாத்தியங்கள் குறித்தும் இந்த ஆறுவிஞ்ஞானிகளும், ஒரு உயர் அதிகாரியும் பொதுமக்களுக்கு முறையாக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி கோரவில்லை என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏழுபேருக்கும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். இந்த தண்டனையை எதிர்த்து இந்த ஏழுபேரும் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

நிலவியல் விஞ்ஞானிகளுக்கு நீதிமன்றம் விதித்திருக்கும் இந்த சிறைத்தண்டனை விஞ்ஞான உலகில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய நிலையில் நிலவியல் விஞ்ஞானம் என்பது நிலநடுக்கத்தை பெருமளவுக்கு தோராயமாக கணித்துக்கூறவல்ல நிலையில் மட்டுமே வளர்ந்திருப்பதாகவும் 100சதவீத துல்லியத்தன்மையுடன் நிலநடுக்கத்தின் அளவை கணிப்பது கடினம் என்றும், இந்த நிலைமையில் விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த சிறைத்தண்டனை என்பது விஞ்ஞானிகளை அச்சுறுத்தும் செயல் என்றும், இது விஞ்ஞான பரிசோதனை முயற்சிகளுக்கு நல்லதல்ல என்றும் விஞ்ஞானிகளில் ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு இத்தாலியை பாதித்த நிலநடுக்கத்தைத் துல்லியமாக கணிக்கத்தவறியதற்காக ஆறு விஞ்ஞானிகளுக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பது தவறு என்கிறார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் அருணாசலம்.