தமிழன்தான் முதல் குரங்கு என்றால் திருப்தியா?

siladassகி.சீலதாஸ். பகுதி 1. இன்றைய  மலேசியாவில்   தமிழர்களின்   அல்லது  பொதுவாக  இந்தியர்களின்    நிலை  என்ன?  எதிர்காலத்தில்   அது  எப்படி இருக்கும்?  என்ற  கேள்விகளை  எழுப்புவது  நியாயமானதாகவும்   காலத்துக்கேற்ற   கேள்விகளாகவும் இருக்கும்.  இன்றைய   இந்தியர்  சமூகம்  அதன்     நாளைய   சந்ததியின்   நலனைக்   கவனத்தில்   கொள்ள   வேண்டுமென்பது   காலத்தின்   கட்டாயம்.  எனவே, பழங்காலத்து  வீரக்கதைகளைப்   பேசிப்பேசிப்  பெருமிதம்   கொள்வதைத்   தவிர்த்து    இனி   என்ன   செய்ய   வேண்டும்   என்ற  செயலில்   இறங்குவதே   சரியாகப்படுகிறது.

பழம்   பெருமைகளுக்குத்   இந்தியர்கள்   சொந்தக்காரர்கள்  என்று   கூறுவதால்  பலன்   இல்லை.  உதாரணத்துக்கு   யாதும்   ஊரே  யாவரும்  கேளிர்  என்ற   பூங்குன்றனாரின்   வாய்மொழி   எவ்வளவு   உயர்வானது,   அர்த்தமுள்ளது  என்பது  நமக்குத்  தெரியும்.  காணும்   இடமெல்லாம்    நமது   ஊரே.   அங்கு   காண்பவர்கள்   அனைவரும்   நம்மவர்களே- நண்பர்களே- என்ற  உயரிய   நோக்கு   பண்டைத்   தமிழனிடம்   இருந்திருக்கிறது.  அதற்கான   காரணத்தை   தேடி  அலைந்தால் நமக்குக்  கிடைப்பது  என்ன?  தமிழன்  ஏழ்கடல்   தாண்டிச்  சென்று   வாணிபத்தில்   வெற்றிக்   கண்டவன்.  எனவே   போன  இடமெல்லாம்  அவன்   மனதில்  தமது  இடமாகப்  பட்டிருக்கலாம்.  அங்கே  பார்த்தவர்களை   எல்லாம்   தமது  நண்பர்கள்   போலவும்   உடன்பிறப்புப்   போலவும்  ஏற்று  நடந்துகொண்டிருக்கலாம்.

அதில்  பரந்த  மனப்பான்மை   இருக்க  வழியுண்டு.  அதே  சமயத்தில்   மற்றொரு  கோணத்திலிருந்து   பார்ப்போமேயானால்   இந்த  உலகம்  மாயம்.   நடப்பதெல்லாம்   மாயம்.   வாழ்வும்   மாயம்  என்ற   எண்ணம்  உயர்ந்திருந்த   மனோபாவத்தையும்   மறந்துவிடக்கூடாது.   அதையும்  கணக்கில் சேர்த்துக்கொண்டால்  காணும்  எல்லா  இடங்களும்  சமமே.  காணப்படும்   மனிதனும்  – நம்மவரே  என்ற   மனோபாவம்  வலுவடைந்திருக்கலாம்.

அடுத்து,  சமய  வளர்ச்சி  மனிதனின்  இயற்கையான  சுபாவங்களை   மாற்றிடும்  தன்மையைக்  கொண்டிருந்தது.  சமயங்களிடையே போட்டி,  விரோத  மனப்பான்மை  போன்றவை  வளர்ந்துவிட்ட  நிலையில்   திருமூலர்   சொன்னார்  “எம்மதமும்   சம்மதமே”.

இந்த   இரண்டு  அற்புதமான   வாய்மொழியை  எடுத்துகொண்டு   ஆராய்ந்து   பார்த்தால்   பிறர் தமிழனைப்   பத்தாம்பசலி   என்று  தீர்மானித்துவிடுவார்கள்.  காரணம்   தமிழனிடமிருந்தப்    பரந்த  மனப்பான்மை  பிறரிடம்   காணமுடியவில்லை.  சமயத்தை   ஏற்றுக்கொண்டாலும்   அதே  கதிதான்.  கடவுளையே   மதமாற்றம்   செய்யும்  காலம்  இது.

நான்  சில  ஆண்டுகளுக்கு  முன்பு  அறுவைச்  சிகிச்சைக்காகப்  போயிருந்தேன்.  அதற்குமுன்,  தாதி  தமது  கடமையைச்  செய்துகொண்டு  “உங்களுக்கு  கடவுள்  நம்பிக்கை  இருக்கிறதா?”  என்று   கேட்டார்.  “உண்டு”  என்றேன்.  “எந்தக்  கடவுள்”  என்று  மறுபடியும்  கேட்டார்.  நான்   புரியாமல்  அவரைப்   பார்த்தேன்.  “இந்துக்  கடவுளா?,  கிறிஸ்தவக்  கடவுளா…?” என்று அடுக்கிக்கொண்டே   போனார்.  அவரை   இடைமறித்து  “நான்  கேட்கவில்லை…!  கடவுளிடம்   நீ  எந்த  மதத்தைச்  சேர்ந்தவர்   என்று  கேட்கவில்லை!”  என்றேன்.

மதத்தை   எடுத்துக்கொண்டால்   கடவுளை   குழப்புவதில், தமிழனை   அல்லது  பொதுவாக  இந்தியர்களை  விஞ்சிவிட்டனர் மற்றவர்கள். அந்த  வகையில்  அவன்  சிறுபான்மையே.

பல  நன்னெறிகளைத்  தந்தவன்  தமிழன்.  ஆனால்  அவை  பிறருக்குப்  போய்  சேரவில்லை  என்பது  ஒரு  புறமிருக்க  தமிழனே  அந்த  நன்னெறிகளை  மறந்து  வாழ்கிறான்  என்றால்  அதுவும்  உண்மையே.  இன்னும்  சொல்லப்போனால்  தமிழில்  எப்படிப்பட்ட  நன்னெறிகள்   உள்ளன  என்பதை   அறியாதவனாக   வளர்ந்து வருகிறான்  இந்த   நாட்டில்.

சோ. விருத்தாசலாம் – சோவி- என்று அழைக்கப்பட்டவர்,  சிறுகைதைகள்   எழுதி  நல்ல  புகழ்  கண்டவர்.  புதுமைப்பித்தன்  என்றப்  பெயரில்  இலக்கிய   உலகில்  பீடு  நடைபோட்டவர். மண்தோன்றி  கல்  தோன்றா  காலத்தே  பிறந்த  மூத்தக்குடி    தமிழ்குடி  என்பதைப் பற்றி  சொல்லும்போது, தமிழன்தான் முதல்  குரங்கு  என்றால்கூட  திருப்திபடமாட்டான்  என்றார். தமிழனின்  பரிதாப  நிலையைத்  தெளிவாகச்  சொல்ல  வேறு  என்ன வேண்டும்.

(தொடரும்)